மோஜ் செயலியால் லாட்ஜ் வரை சென்று மோசம் போன பெண் பட்டதாரிக்கு நடந்த சம்பவம் போலீசாரையே அதிர்ச்சியடையவைத்துள்ளது.
சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் பிகாம் முடித்துவிட்டு வீட்டிலிருந்து வருகிறார். கடந்த நான்கு மாத காலமாக மோஜ் செயலி (@smiley - 2000) மூலம் எதிரி லிபின்ராஜ் என்ற பெயரில் அறிமுகமான நபருடன் தொடர்ந்து செல்போனில் தினமும் பேசி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் வீடியோ காலில் பேசியபோது உடம்பில் ஆடை இல்லாமல் பேசிய அந்தரங்க புகைப்படங்களை லிபின் ராஜ் பதிவு செய்து வைத்துக்கொண்டு, செப்டம்பர் மாதம் செல்போனில் தொடர்பு கொண்டு பெரிய மேட்டில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துள்ளார். வரவில்லை என்றால் தன்னிடம் உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் வேறு வழியின்றி இளம்பெண் லாட்ஜுக்கு சென்று, லிபின் ராஜின் ஆசைக்கு இணங்கியுள்ளார். அக்டோபர் மாதமும் மிரட்டி லாட்ஜுக்கு வரவழைத்து இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட லிபின் ராஜ் லாட்ஜ்க்கு வா என கூறியுள்ளார். தனது பாட்டி இறந்து மூன்று நாட்கள் தான் ஆகிறது எனக்கூறி இளம் பெண் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லிபின் ராஜ், இளம் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அவருடைய தாயாரின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இது தொடர்பாக திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண் புகார் அளித்தார். அதன் பேரில் நம்பிக்கை மோசடி , பாலியல் வன்கொடுமை, மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கன்னியாகுமரியில் பதுங்கி இருந்த லிபின் ராஜை (25)கைது செய்தனர். ஆட்டோ டிரைவர் லிபின் ராஜ் இதேபோல் எத்தனை பெண்களை சீரழித்துள்ளார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.