Harini Muralidharan
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவில் நடந்த இந்தத் தொடரை வென்று முதல் முறையாக மகுடம் சூடியது மகளிர் அணி.
இந்த அணியில் மருத்துவராகப் பணியாற்றிய ஹரிணி முரளிதரன் சென்னையைச் சேர்ந்தவர். உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டங்கள், முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகளெல்லாம் முடிந்து திரும்பியவர், பிபிசி தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அவரது பயணம், உலகக் கோப்பையின் ஏற்ற இறக்கங்கள், இந்திய அணி தோல்விகளிலிருந்து மீண்டு வந்த தருணங்கள், இந்த அணிக்கு பெரும் உத்வேகமாக இருந்த விஷயங்கள் என இந்தப் பேட்டியில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் மருத்துவர் ஹரிணி.
கேப்டன், துணைக் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் ஆகியோர் முக்கியமான தருணங்களில் என்ன செய்தார்கள் என்பது பற்றி நம்மிடம் அவர் கூறினார்.
உலக சாம்பியன் அணியின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறீர்கள். அந்த உணர்வு எப்படி இருக்கிறது?
உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் மருத்துவராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பே பெரிய விஷயம். அதற்கே முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். அதன்பிறகு அந்தப் பயணத்தில் ஒன்றாக இருந்து, அணியோடு வெற்றி, தோல்விகள் அனைத்தையும் சந்தித்து, அந்த உலகக் கோப்பையையும் வென்ற அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்ல வார்த்தையே இல்லை. அந்த நிமிடங்கள் எங்கள் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் தான் வந்தது.
சொல்லப்போனால் அப்போது எதுவுமே தோன்றவில்லை, ஆனால் எங்களைச் சுற்றிப் பேசிய ஒரு விஷயம் பின்பு புரிந்தது. அது என்னவெனில், ஆண்கள் கிரிக்கெட்டுக்கு எப்படி 1983 உலகக் கோப்பையோ அதுபோல் பெண்கள் கிரிக்கெட்டுக்கு இந்த வருட வெற்றி என்றார்கள். அதைக் கேட்கும்போது புல்லரித்தது. இது மிகவும் விசேஷமான ஒரு தருணம்.
Harini Muralidharan இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மருத்துவர் ஹரிணி முரளிதரன்
ஒரு கிரிக்கெட் அணியில் உங்கள் பயணம் எப்படித் தொடங்கியது? இந்த அணியில் மருத்துவராக உங்களுடைய பங்கு என்ன?
மருத்துவம் முடித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது சிலர் ஸ்போர்ட்ஸ் மருத்துவத்தை பரிந்துரைத்தனர். எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட, பாசு சங்கரிடம் (இந்திய அணிக்கு ஸ்ட்ரெங்த் அண்ட் கண்டிஷனிங் பயிற்சியாளராக இருந்தவர்) இன்டர்ன்ஷிப் (internship) செய்தேன்.
அப்போது ஒரு மாதத்திலேயே எனக்கு இதுதான் எதிர்காலம் என்று தோன்றிவிட்டது. அதன்பிறகு பிரிட்டனில் முதுகலை பட்டம் பெற்றேன். இப்போது ஆர்சிபி (RCB), இந்திய அணி என்று பயணிக்கிறேன்.
ஸ்போர்ட்ஸ் மருத்துவம் என்பது 'காயம் மேலான்மை' (injury management) பற்றியது. முக்கியமாக ஒரு காயம் ஏற்படுவதை எப்படித் தவிர்க்கலாம், ஒருவேளை காயம் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவதற்கான அவகாசத்தை எப்படிக் குறைக்கலாம் என்பன முக்கியமான விஷயங்கள்.
அதிலிருந்து தொடங்கி, ஊக்கமருந்து பயன்பாட்டைத் தடுப்பது எப்படி என்பதிலும் நாங்கள் பங்களிக்கவேண்டும். மேலோட்டமாக சொல்லவேண்டுமென்றால் கொஞ்சம் ஊட்டச்சத்து, கொஞ்சம் உளவியல் ஆகியவையும் சேர்ந்ததுதான் ஸ்போர்ட்ஸ் மருத்துவம்.
இதுவே ஒரு அணிக்குள் ஃபிசியோதெரபிஸ்ட், ஸ்ட்ரெந்த் அண்ட் கண்டிஷனிங் (strength & conditioning) பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர், உளவியல் ஆலோசகர் என தனித்தனியாக ஒவ்வொரு துறைக்கும் ஒரு வல்லுநர் இருப்பார்கள். அதேசமயம் வீரர்களும் தனியாக தங்களுக்கு இந்த விஷயங்களில் பயிற்சியாளர்கள் வைத்திருப்பார்கள்.
அப்படியிருக்கும்போது நான் முக்கியமாக கவனத்தில் கொள்வது, ஒரு தொடருக்கு நடுவே எந்த மாற்றமும் கொண்டுவரக்கூடாது என்பது. அந்தந்த தருணங்களில் அந்த வீரருக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்துவிட்டு வெளியே வந்துவிடவேண்டும்.
காயம் மேலாண்மை என்று பேசும்போது, இந்த இந்திய அணியில் உங்களுக்கு பல சவால்கள் இருந்திருக்கும். ஐந்து வாரங்கள் நடக்கும் ஒரு மிகப் பெரிய தொடரில் அனைவரையும் ஃபிட்டாக வைத்திருப்பது என்பதே மிகப் பெரிய சவால்தானே?
பொதுவாகவே இப்போது ஆண்கள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி பெண்கள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, ஆஃப் சீசன் (Off Season - போட்டிகள் இல்லாத காலகட்டம்) என்பதே இல்லாமல் போய்விட்டது.
ஒரு வீரரின் ஃபிட்னஸ் முன்னேற்றம் பற்றிய எங்களுடைய திட்டங்கள் ஓய்வு நேரத்தை பொறுத்துத்தான் அமையும். ஆனால், இப்போது வீரர்களுக்கு அவ்வளவாக நேரமே கிடைப்பதில்லை. அதனால் அவர்களுக்கு ரெகவரி நேரம் (recovery time) மிகவும் குறைவு.
இந்த உலகக் கோப்பைக்கு முன்புகூட அவர்கள் ஒரு தொடரை முடித்துவிட்டு (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) நேராக இந்த உலகக் கோப்பைக்குள் நுழைந்தார்கள். அப்படியிக்கும்போது அதன் தாக்கம் நிச்சயம் இதில் இருக்கும். ஆனால், நான் அதை சவால் என்று சொல்லமாட்டேன்.
ஒவ்வொரு வீரருக்குமான தேவை என்ன, அவர்கள் எந்த அளவுக்கு ஓய்வு எடுக்கிறார்கள், அவர்களின் ரெகவரி நேரம் என்ன என்பதை கணக்கிட்டோம். ஒரு சிறு வலியாக இருந்தாலும் அதற்கு என்ன செய்யவேண்டும், ஃபிசியோ தேவையா, மருந்துகள் தேவையா, மருந்துகள் என்றால் என்ன கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கவேண்டும் என்று சரியாகத் திட்டமிட்டோம். உதாரணமாக ஆன்டிபயாடிக்ஸ் (antibiotics) கொடுக்கும்போது உடல் பலவீனமாகும். அதனால் அனைத்து விஷயங்களையும் சரியாக அலசி ஒவ்வொன்றையும் திட்டமிட்டோம்.
சரி, இந்த உலகக் கோப்பையின் முக்கிய தருணங்களைப் பற்றிப் பேசுவோம்... லீக் சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ச்சியாக 3 போட்டிகளைத் தோற்றது. அந்த 3 போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணி மீண்டு வந்தது எப்படி? அதற்குக் காரணமாக இருந்த விஷயங்கள் என்னென்ன?
இந்த அணியில் நான் பார்த்த நல்ல விஷயம் ஒன்று இருக்கிறது. அந்தத் தோல்விகள் அவர்களுக்குக் கொஞ்சம் கனமாக இருந்தன. ஆனால், அதை யாருமே நெகடிவாக வெளிக்காட்டவே இல்லை. 'இன்று நாம் தோற்றுவிட்டோம், அடுத்த போட்டியில் ஜெயித்துவிடலாம்' என்ற மனநிலையில் தான் இருந்தார்கள். நானாக இருக்கட்டும், அணியில் இருந்த பயிற்சியாளர் குழுவாகட்டும், அனைவருமே உரையாடல்களை பாசிடிவாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தோம்.
யாரிடமும் தோல்வியைப் பற்றிப் பேசாமல், அடுத்த போட்டிக்கு, அடுத்த பயிற்சிக்கு என்ன செய்யப்போகிறோம், வீரர்களுக்கு என்ன மாதிரியான உதவிகளை நாம் செய்யப்போகிறோம், அவர்களை எப்படி அடுத்த வெற்றிக்குத் தயார் செய்யப்போகிறோம் என்பதுதான் எங்களின் உரையாடல்களாக இருந்தது.
அனைவருமே அடுத்த நாள் பற்றித்தான் யோசித்தார்களே தவிர, முந்தைய நாள் பற்றி யாரும் பேசவில்லை.
அதுவே வீராங்கனைகளுக்கு ஒரு நல்ல உத்வேகமாக அமைந்தது என்று நினைக்கிறேன். அணியின் பயிற்சியாளர் குழுவில் யாரும் அந்தத் தோல்விகளைப் பற்றிப் பேசவில்லை எனும்போது, 'அவர்கள் நம்மை நம்புகிறார்கள். நமக்காக உழைக்கிறார்கள்' என்ற எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கவேண்டும். அதுவே அவர்களுக்கான உத்வேகத்தைக் கொடுத்திருக்ககூடும்.
குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமே! ஏனெனில், தொடர்ச்சியாக 3 தோல்விகளுக்குப் பிறகு அரையிறுதி இடம் பற்றிய கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. அந்தத் தோல்விக்குப் பின் என்ன மாற்றம் நடந்தது?
நிச்சயமாக அந்த மூன்றாவது தோல்வி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் முறையாக அந்தத் தொடரின்போது வீராங்கனைகளின் கண்களில் நான் கண்ணீரைப் பார்த்தேன். 'இந்தப் போட்டியை விட்டுவிட்டோமே' என்ற கவலை அவர்களிடத்தில் இருந்தது. அங்கு நடந்த அழகான விஷயம் என்னவெனில், அணியின் கேப்டனும் (ஹர்மன்ப்ரீத் கவுர்) துணைக் கேப்டனும் (ஸ்மிரிதி மந்தனா) பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டார்கள்.
'இது எங்கள் அணி, அந்த பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறோம், நாங்கள் இந்த அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறோம்' என்றார்கள்.
கேப்டனும் தலைமைப் பயிற்சியாளரும் இன்னொரு அழகான விஷயம் சொன்னார்கள். அங்கிருந்த சப்போர்ட் ஸ்டாஃப் (support staff) அனைவரையும் பார்த்து உங்களுக்காக இதை வென்றுகொடுக்கிறோம் என்றார்கள். வீராங்கனைகள் எங்களுக்காக பேசியது மிகவும் சிறப்பான ஓர் உணர்வைக் கொடுத்தது. இந்த வீராங்கனைகள் அவர்களுக்காக என்று நினைக்காமல், ஒருவருக்கொருவர் ஆடவேண்டும் என்றுதான் நினைத்தார்கள். அதுதான் இந்த அணியின் சிறப்பம்சம்.
நீங்கள் சொன்னதுபோல், ஸ்மிரிதி தானே அந்தத் தோல்விக்குப் பொறுப்பெடுத்துக்கொள்வதாக பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கூறினார். தன்னுடைய விக்கெட் தான் தோல்விக்கு வித்திட்டது என்று வெளிப்படையாக சொன்னார். சொன்னதுபோல் பொறுப்பை ஏற்று அடுத்த போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்தார். அவரை ஆர்சிபி அணியில் இன்னும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அந்த இங்கிலாந்து டிஸ்மிசல் அவரிடம் ஏற்படுத்திய தாக்கம் என்ன, அடுத்த சில தினங்களில் ஸ்மிரிதியிடம் என்ன மாறியது?
அவரிடம் எதுவும் அதிகமாக மாறியது என்று நான் நினைக்கவில்லை. அவர் தலைமைப்பண்பை நன்கு வெளிப்படுத்தினார் என்றுதான் நான் சொல்வேன். ஸ்மிரிதி அன்று களமிறங்கும்போது 'நான் என்னுடைய 100% கொடுப்பேன் என்றுதான் இறங்கினார். ஆனால், அவர் எப்போதுமே அந்த மனநிலையில் தான் களமிறங்குவார். அவர் அதே மனநிலையில் தான் இருந்தார்.
அதேசமயம், என்னதான் பொறுப்பை அவர் தன் தோள்களில் ஏற்றுக்கொண்டாலும், இந்த இந்திய யூனிட் எப்போதும் ஓர் அணியாகவே செயல்பட்டார்கள். அவர்கள் அனைவருமே அந்தப் போட்டிக்கு நன்கு தயாரானார்கள். அந்தப் போட்டிக்கு முன்பு நடந்த 2 பயிற்சி செஷன்களிலுமே மிகவும் தீவிரமாக பயிற்சியெடுத்தார்கள். அதன்பிறகு அந்த அணியின் நம்பிக்கை அவர்கள் உடல்மொழியிலேயே வெளிப்பட்டது.
அந்த இங்கிலாந்து தோல்வி உங்களுக்கு பெர்சனலாகவும் வருத்தமளித்திருக்குமே! ஏனெனில், அன்று (அக்டோபர் 19) உங்களுடைய பிறந்த நாள் வேறு...
நான் இந்த பணிக்கு விண்ணப்பித்த பிறகு, 'என் பிறந்தநாளன்று இந்திய அணியுடன் இருக்கவேண்டும்' என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். 2 தோல்விகளுக்குப் பிறகு அன்று வீராங்கனைகள் சற்று பாசிடிவாகத்தான் இருந்தார்கள். 'இன்னைக்கு எனக்காக ஜெயித்துக் கொடுத்திடுங்க' என்று விளையாட்டாக சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால், போட்டி முடிந்த பிறகு அனைவருக்கும் மிகவும் கனமாக இருந்தது.
அந்த நிலையிலும் கூட வீராங்கனைகள் கேக் வெட்டுவதற்காக எடுத்துவந்தார்கள். நான் வேண்டாமென்று சொல்லியும் அவர்கள் கேட்காமல் கேக் வெட்ட வைத்தார்கள். எல்லாம் முடித்து கிளம்பும்போது பேருந்தில் ஜெமி (ஜெமிமா ரோட்ரிக்ஸ்) அருகில் தான் நான் அமர்ந்திருந்தேன். அவர்தான், 'சாரி மேம் உங்களுக்காக ஒரு பிறந்த நாள் பரிசு கொடுக்க முடியவில்லை' என்று வருந்தி கூறினார். 'பரவாயில்லை ஜெமி, 2ம் தேதி (நவம்பர் 2 - இறுதிப் போட்டி நடந்த நாள்) பரிசு கொடுங்கள் என்று சொன்னேன்.
அன்று இறுதிப் போட்டியை வென்றதும், பரிசுக்கு நன்றி என்று ஜெமியிடம் சொன்னேன். கட்டிப்பிடித்து 'ஹேப்பி பர்த்டே மேம்' என்று அவர் சொல்லிச் சென்றார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஒரு மிக முக்கியமான செயல்பாட்டை இந்த உலகக் கோப்பையில் கொடுத்தார். ஆனால், அவருக்கு இந்த உலகக் கோப்பை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தொடரின் தொடக்கத்தில் இரண்டு டக் அவுட்கள், பின்னர் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார், அதன்பிறகு பேட்டிங் பொசிஷன் மாற்றம் வேறு. அனைத்தையும் கடந்து அசத்தினார். ஆனால், அவரும் கூட உளவியல் ரீதியாக கஷ்டப்பட்டதாகக் கூறினார். நீங்களும் ஸ்போர்ட்ஸ் மருத்துவத்தில் உளவியலும் ஒரு அங்கம் என்று சொன்னீர்கள். உங்கள் பார்வையில் ஜெமியின் இந்தப் பயணம் எப்படி இருந்தது?
ஜெமி போன்று ஒரு பாசிடிவான குதூகலமான ஒரு ஆளைப் பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று. அவர் அவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தார் என்பதே அந்த பேட்டியைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அவர் தன்னுடைய அறையில் அந்த உணர்வுகளோடு போராடியிருக்கிறார். அதை நினைக்கும்போதே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது.
அவர் வெளியில் ஒரு இடத்தில் கூட அந்த உணர்வுகளை காட்டிக்கொள்ளவில்லை. அவர் எல்லோர் மீதும் அக்கறை செலுத்துவார், அனைத்து விஷயங்களிலும் அக்கறை செலுத்துவார். மும்பையில் அவர் வீட்டில் இருந்து அவருக்காக ஏதாவது உணவுப்பொருள் வருகிறதென்றால், அது மொத்த அணிக்கும் வருமாறு பார்த்துக்கொள்வார்.
மிகவும் பாசிடிவான நபர் அவர். அந்த தருணத்தில் அணிக்கு என்ன வேண்டும் என்பதை மட்டுமே பார்க்கும் ஒருவர் அவர். அவுட் ஆனாலும் கூட, அடுத்து ஃபீல்டிங்கில் எப்படி பங்களிக்கலாம் என்று யோசிப்பவர். அவரைப் பொறுத்தவரை எல்லாமே அணிக்காகத்தான். அதுதான் முதலில்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. 338 என்ற இலக்கை அதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் யாரும் சேஸ் செய்ததில்லை. அதை இந்தியா மிகப் பெரிய அரங்கில் நிகழ்த்திக் காட்டியது. ஆனால், அசாத்தியம் என்று கருதப்பட்ட விஷயம் எப்படி சாத்தியமானது. இன்னிங்ஸ் இடைவெளியில் என்ன நடந்தது?
அப்போது யாரும் அதிகமாகப் பேசிய நினைவு இல்லை. அனைவரும் தயாராகிக்கொண்டுதான் இருந்தோம். ஆனால், தலைமைப் பயிற்சியாளர் ஒரேயொரு விஷயத்தை அங்கிருந்த போர்டில் ஒரு விஷயத்தை எழுதினார். 'நாம் அவர்களை விட 1 ரன் அதிகமாக எடுப்போம்' என்பதை எழுதிவிட்டு அவர் சென்றுவிட்டார். அவ்வளவுதான். எல்லோரும் தயாரானார்கள். சென்று கூடுதலாக அந்த ரன்களையும் எடுத்துவிட்டார்கள்.
தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை. ஆனால், இன்று ஓர் உலகக் கோப்பையை வென்றுகொடுத்திருக்கிறார். அவர் இந்த அணியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன?
நான் பார்த்தவரைக்கும் அவர் மிகவும் நிதானமான நம்பிக்கையான பயிற்சியாளர். அவருக்கு என்ன தேவை என்பது அவருக்கு நன்கு தெரியும். அதை சரியாக நடைமுறைப்படுத்த என்ன தேவையோ அதை சரியாகத் திட்டமிட்டு, சரியாக அதை தொடர்புகொள்கிறார். இது முதல் விஷயம்.
இரண்டாவதாக, ஒரு வீரரின் பலம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அந்த வீரரை 100% நம்புகிறார். அந்த வீராங்கனை கொடுக்கும் கருத்துகளை (feedback) ஏற்றுக்கொண்டு திட்டமிடுகிறார். வீரர்கள் மட்டுமல்ல எங்களைப் போன்ற சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கும் அதுதான். 'நீங்கள் இந்த விஷயத்தில் வல்லுநர், இதுதான் சிறந்தது என்று நீங்கள் பரிந்துரைத்தால் நாம் அதைச் செய்வோம்' என்கிறார்.
அவர் எதையும் முயற்சி செய்யாமல் விடுவதில்லை. ஒரு விஷயத்தைச் செய்தால் நல்ல முடிவு கிடைக்குமா, அதை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா, அப்படியிருந்தால் அதை நாம் செய்துவிடுவோம் என்று சொல்பவர். இதுவொரு மிகச் சிறந்த பண்பு. ஒவ்வொருவரின் மீதும் மரியாதை செலுத்தி, அவர்கள் மீது நம்பிக்கையும் வைக்கும்போது இந்த அணி ஒரு குடும்பம் போல் ஆகிவிடுகிறது.
Getty Images இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளரான அமோல் மஜும்தார் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை
வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடர் இந்த வெற்றியில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
டபிள்யூ.பி.எல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக மிகப் பெரியது. அதை மறுக்கவே முடியாது. பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன் தொடர் அட்டவணைகள் என்பது அவ்வளவாக இருந்திருக்கவில்லை. நம்முடைய இந்தியா மிகப் பெரிய நாடு. இங்கு ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் சென்று தேசிய அணிக்கு வீரர்களை அடையாளம் காண்பது என்பது நடைமுறையில் கடினமான ஒன்று. இந்த இடத்தில் டபிள்யூ.பி.எல் மேடை நன்கு இந்திய கிரிக்கெட்டுக்கு உதவியிருக்கிறது.
இந்த 3 ஆண்டுகளில் வீரர்களின் தரத்தில், ஃபிட்னஸில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சீசனில் இருந்ததை ஒப்பிடும்போது இப்போது நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. இங்கு வாய்ப்பு பெற்ற வீராங்கனைகள் பிரகாசமாக ஜொலிப்பதற்கும், புதிதாக வீராங்கனைகள் விளையாட ஆசைப்படுவதற்கும் இது ஊக்கம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது.
இவ்வளவு ஏன் எங்களைப் போன்ற சப்போர்ட் ஸ்டாஃப்கள் கூட நிறையப் பேர் அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு