குளிர் காலத்தில் வெந்நீரில் குளிப்பது உடல்நலனுக்கு உகந்ததா?
BBC Tamil November 12, 2025 09:48 PM
Getty Images குளிர்காலத்தில் மக்கள் பெரும்பாலும் வெந்நீரில் குளிப்பதைத்தான் விரும்புவார்கள்

குளிர்காலம் வந்தாலே, காலையில் பலரும் ஒரு கேள்வியுடன் போராடுவார்கள்: 'குளிக்க வேண்டுமா, வேண்டாமா?'

குளிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால், பிறகு அடுத்த கேள்வி எழும்: 'வெந்நீரில் குளிப்பதா அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதா?'

பலர், குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதே சிறந்தது என்று கூறுகின்றனர். இது உடலுக்கு இதமளிக்கிறது, சோர்வைப் போக்குகிறது, மற்றும் குளிரில் இருந்து பாதுகாக்கிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால், மறுபுறம் சிலர், வெந்நீரில் குளிப்பது சருமத்தை வறண்டு போகச் செய்யும், கூந்தலுக்கு சேதம் விளைவிக்கும், மற்றும் உடலின் இயற்கை எண்ணெய் அடுக்கை அழித்துவிடும் என்று நம்புகிறார்கள்.

உண்மையில் எது சரி? நாம் எல்லாப் பருவங்களிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டுமா அல்லது குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது சிறப்பானதா? இந்த விஷயத்தில் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

வெந்நீரில் குளித்தால் என்ன நடக்கும்?

'சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் மேம்பாட்டு ஆய்விதழில்' (International Journal of Scientific Research and Engineering Development) 2022இல் வெளியிடப்பட்ட ஓர் ஆராய்ச்சி அறிக்கையின்படி, உடலின் வெளிப்புறப் பரப்பில் கெரட்டின் செல்கள் உள்ளன.

வெந்நீரில் குளிக்கும்போது இந்த செல்கள் சேதமடைகின்றன. இதனால் எக்ஸிமா (Eczema) போன்ற தோல் நோய்கள் வரக்கூடும்.

குளிர்காலத்தில் மக்கள் அடிக்கடி வெந்நீரில் குளிப்பதை விரும்புகிறார்கள், ஆனால் தோல் மருத்துவர்கள் இதை ஒரு பெரிய ஆபத்தாகக் கருதுகின்றனர். மிக அதிகச் சூடான நீர் நமது சருமத்தின் இயற்கையான பாதுகாப்பு அடுக்கைச் சேதப்படுத்தும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் தோல் மருத்துவர் அஞ்சு ஜா கூறுகையில், குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்கலாம், ஆனால் நீர் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும், மிக அதிகமான சூட்டில் இருக்கக்கூடாது.

"அதிக சூடான நீரில் குளித்த பிறகு சருமத்தில் வறட்சி ஏற்படலாம். இதைத்தான் நாம் 'செரோசிஸ்' (Xerosis) என்று அழைக்கிறோம்," என்று அஞ்சு ஜா கூறினார்.

Getty Images

அப்போலோ மருத்துவமனையின் தோல் மருத்துவர் டி.எம். மஹாஜன் கூறுகையில், "குளிர்காலத்தில் குளிக்கும்போது நீர் சூடாக இருப்பது அவசியம். ஆனால் அது உங்களுக்குக் குளிர்ச்சியாக இருக்காத அளவுக்கு மட்டுமே சூடாக இருக்க வேண்டும்."

நமது சருமத்தின் மேல் அடுக்கில் செபம் (Sebum) மற்றும் லிப்பிட்கள் (Lipids) அடங்கிய ஒரு மெல்லிய எண்ணெய் அடுக்கு உள்ளது. இது உடலை பாக்டீரியா, தூசி மற்றும் வெளிப்புறத் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. இந்த அடுக்கு சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் உதவுகிறது.

"உடலில் மிகச் சூடான நீரைக் கொட்டினால், ஏற்கெனவே இருக்கும் அத்தியாவசியமான எண்ணெய் கழுவப்பட்டுவிடும். ஒருவர் அதிக சூடான நீரைப் பயன்படுத்தும்போது, இந்த அடுக்கு வேகமாக உடையும்," என்று மருத்துவர் டி.எம். மஹாஜன் கூறுகிறார்.

அவரது கூற்றுப்படி, எண்ணெய் அடுக்கு நீக்கப்படுவதால் லேசான அசௌகரியம் உணரப்படலாம். வெந்நீரால் தோல் வறண்டு போகிறது மற்றும் உடலில் அரிப்பு ஏற்படத் தொடங்குகிறது.

Getty Images யாருக்கு அதிக ஆபத்து?

நீர் மிக அதிகமான சூட்டில் இருந்தால், அது எந்தவொரு சாதாரண மனிதருக்கும் தீங்கு விளைவிக்கலாம். ஆனால் சில நேரங்களில், நீர் சாதாரணமாக இருக்க வேண்டியதைவிட சற்று சூடாக இருந்தால், சிலருக்கு அதிக சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

"சருமத்தில் ஏற்கெனவே வறட்சி இருந்து, நீங்கள் அதிக சூடான நீரில் குளித்தால், தோல் அழற்சி (Dermatitis) மற்றும் எக்ஸிமா ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது," என்று அஞ்சு கூறுகிறார்.

தோல் அழற்சி என்பது சருமத்தில் வீக்கம் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும் ஒரு பொதுவான பிரச்னை. இதனால் தோல் சிவந்து போகவும் கூடும்.

ஒருவருக்கு ஏற்கெனவே எக்ஸிமா (அடோபிக் டெர்மடிடிஸ்) இருந்தால், வெந்நீரில் குளிப்பது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர் டி.எம். மஹாஜனும் நம்புகிறார்.

எக்ஸிமா என்பது ஒரு தோல் நோயாகும். இது சருமத்தை வறண்டு போகச் செய்து, சிவப்பாக மாற்றுகிறது. அத்துடன், அதிக அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

நீங்கள் பாலிசைதீமியா வேரா (Polycythemia Vera) நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் (உடலில் தேவைக்கு அதிகமாகச் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்கும் நோய்), வெந்நீரில் குளிக்கும் விஷயத்தில் நீங்கள் இன்னும் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் டி.எம். மஹாஜன் எச்சரிக்கிறார்.

"இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக சூடான நீரில் குளித்தால், அவர்களின் சருமத்தில் மேலும் அதிக சிவப்பைக் காணலாம்," என்று அவர் கூறுகிறார்.

கடும் குளிரில் உங்கள் உடலில் குளிர்ந்த நீரைக் கொட்டினால், அது உயிருக்கே ஆபத்தானதாகக்கூட இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள டெல்லி பிஎல்.கே-மாக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர் மற்றும் நியூரோவாஸ்குலர் இன்டர்வென்ஷன் நிபுணர் மருத்துவர் பிரதீக் கிஷோருடன் நாங்கள் பேசினோம்.

நம் உடல் திடீரென மிகக் குளிர்ந்த அல்லது மிகச் சூடான நீருடன் தொடர்புகொள்ளும்போது, ரத்த நாளங்கள் (Blood Vessels) உடனடியாக எதிர்செயலாற்றுகின்றன என்று அவர் கூறுகிறார்.

"மிகக் குளிர்ந்த நீர் படும்போது ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம் மற்றும் இதயத் துடிப்பு திடீரென வேகமாகலாம். மிகச் சூடான நீர் படும்போது ரத்த நாளங்கள் விரிவடைகின்றன, இதனால் ரத்த அழுத்தம் குறையலாம் மற்றும் தலைச் சுற்றல் அல்லது மயக்கம் போன்ற நிலை ஏற்படலாம். எனவே, மிக அதிக சூடான நீரைத் தவிர்ப்பது அவசியம்," என்று மருத்துவர் பிரதீக் கூறுகிறார்.

ஏற்கெனவே இதயநோய் பாதிப்பு, ரத்த நாள அடைப்பு, உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயத்துடன் தொடர்புடைய வேறு ஏதேனும் நோய் உள்ளவர்களுக்கு, திடீர் வெப்பநிலை மாற்றம் இன்னும் ஆபத்தானது என்று அவர் கூறுகிறார்.

Getty Images

"மிகக் குளிர்ந்த நீரால் ரத்த அழுத்தம் வேகமாக உயரலாம், இது மாரடைப்பு அல்லது மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

குளிர்ந்த நீரில் குளிப்பது பற்றி மருத்துவர் அஞ்சு கூறுகையில், "கடும் குளிர்காலத்தில் மிகக் குளிர்ந்த நீரில் குளிப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்."

"இத்தகைய சூழ்நிலையில் சில்ப்ளேன் (Chilblain) ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. சில்ப்ளேன் என்பது கைகளின் விரல்கள், விரல் நுனிகள் மற்றும் கால் விரல்களில் நீல நிறம், வீக்கம், எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும். குளிர் காரணமாக ரத்த ஓட்டம் மோசமடைவதால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது."

குளிர்காலத்தில் மிகக் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உடலின் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருப்பது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

"சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களின் தோல் அதிக உணர்திறன் கொண்டது. எனவே அதிக சூடான நீரில் குளிக்கும்போது அவர்களுக்குத் தோல் வறட்சி, எரிச்சல் மற்றும் தோல் வெடிப்புச் சிக்கல் மேலும் அதிகரிக்கக்கூடும்," என்று மருத்துவர் அஞ்சு கூறுகிறார்.

"குளிர்காலத்தில் லேசான வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே சிறந்தது. அதோடு, வறண்ட தோல் மற்றும் அரிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள குளித்த பிறகு மாய்ஸ்சரைசர் (Moisturizer) தடவுவது அவசியம்," என்று அவர் கூறுகிறார்.

Getty Images குளிர்காலம் வரும்போது அடிபம்பு அல்லது ஆழ்துளைக் கிணற்றில் இருந்து வெதுவெதுப்பான நீர் வெளியேறும் அடிபம்பு அல்லது ஆழ்துளைக் கிணற்று நீர்

கிராமப் புறங்களில் மக்கள் பெரும்பாலும் அடிபம்ப் அல்லது ஆழ்துளைக் கிணறுகளை பயன்படுத்துகிறார்கள். குளிர்காலம் வரும்போது இந்த அடிபம்பு அல்லது ஆழ்துளைக் கிணற்றில் இருந்து வெதுவெதுப்பான நீர் வெளியேறும்.

இதன் காரணமாகவே, இன்றும் கிராமப்புறங்களில் மக்கள் நீரைச் சூடுபடுத்தாமல் குளிக்கிறார்கள். ஆனால் மருத்துவர்கள் பல நேரங்களில் இதற்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பல கிராமப்புறங்களில் நிலத்தடியில் இருந்து வரும் நீரில் லேசான கனிமங்கள் உள்ளன. வெப்பநிலையைப் பொறுத்து, இந்த நீர் குளிர்காலத்தில் சற்று சூடாகவும், கோடையில் சற்று குளிர்ந்தும் காணப்படுகிறது. எனவே குளிப்பதற்கு இந்த நீர் மக்களுக்கு வசதியாக இருக்கும்.

ஆனால் இந்தக் கனிமங்கள் நிறைந்த நீர் சில நேரங்களில் சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்ற சிக்கல்களை உருவாக்கலாம் என்று மருத்துவர் டி.எம். மஹாஜன் கூறுகிறார்.

அவரது கூற்றுப்படி, இதற்கு அதிலுள்ள கனிமங்களே காரணம். இந்த நீரில் குளோரைடுகள், சல்பேட்டுகள் அல்லது பிற கரைந்த உப்புகளின் அளவு அதிகமாக இருந்தால், அந்த நீர் 'கடின நீர்' (Hard Water) என்ற பிரிவில் சேர்க்கப்படுகிறது.

"கடினத் தன்மை அதிகரிக்கும்போது, இதே நீர் சருமத்தின் இயற்கையான எண்ணெய் அடுக்கை அழித்து விடுகிறது. இதனால் சருமத்தில் வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கின்றன. கூடுதலாக, இத்தகைய நீரில் அதிக கனிமங்கள் இருப்பதால் முடியின் அமைப்பும் பாதிக்கப்படலாம். முடி வறண்டு, உயிரற்றதாகத் தோன்றும்," என்று அவர் கூறுகிறார்.

எனவே, நிலத்தடியில் இருந்து வரும் இந்த நீர் வெப்பநிலையைப் பொறுத்தவரை இதமாக இருந்தாலும், அதன் தரம் மற்றும் கனிமங்களின் அளவு தோல் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து மருத்துவர் பிரதீக் கூறுகையில், "முன்பு வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் அவ்வளவாக இல்லை. கிராமங்களில் உள்ள முதியவர்கள் பெரும்பாலும் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தனர். வயல்களில் உழைத்தனர். அவர்களது உடலால் இத்தகைய 'வெப்பநிலை அதிர்ச்சியை' அதிகம் தாங்க முடிந்தது. ஆனால் ஏற்கெனவே இதயம் அல்லது ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு இந்த ஆபத்து இப்போதும் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

Getty Images அதிக சூடான நீரில் குளிக்கும் போது கூந்தலில் இயற்கையான ஈரப்பதம் குறையத் தொடங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர் முடியின் மீது இதன் தாக்கம் என்ன?

மிக அதிக சூடான நீரில் குளிப்பது சருமத்தில் மட்டுமல்ல, முடியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதிக சூடான நீரில் குளிக்கும்போது முடியில் உள்ள இயற்கையான ஈரப்பதம் குறையத் தொடங்குகிறது, இதனால் முடி வறண்டு, சிக்கலாகி, உடையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"சருமத்தைப் போலவே நமது முடியிலும் இயற்கையான எண்ணெய் உள்ளது. நாம் அதிக சூடான நீரை கூந்தலில் ஊற்றும்போது அது வெளியேறி விடுகிறது, இதனால் முடி வறண்டு போகிறது" என்று டாக்டர் டி.எம். மஹாஜன் கூறுகிறார்.

இதன் காரணமாகவே, குளிர் அல்லது கோடை எதுவாக இருந்தாலும், குளிப்பதற்கு "எப்போதும் லேசாக வெதுவெதுப்பாக உள்ள நீரைப் பயன்படுத்துங்கள், மிக அதிகமாகச் சூடாகியிருக்கும் நீரைத் தவிர்க்கவும்" என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.