நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகைக்கு ரூ.30 ஆயிரம் நிதி தரப்படும் - தேஜஸ்வி யாதவ் உறுதி..!
Top Tamil News November 13, 2025 01:48 AM

பீகாரில் வரும் 6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கும் 12 ஆம் தேதி 122 தொகுதிகளுக்கும் என இரண்டு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.முதல்கட்டத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:

பீகார் சட்டசபைத் தேர்தலில் மகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 18ஆம் தேதி நாங்கள் பதவியேற்போம். இம்முறை பீகாரில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேரோடு பிடுங்கி எறியப்படும்.

நாங்கள் ஏற்கனவே பெண்களுக்காக அறிவித்த திட்டங்களை தாய்மார்களும் சகோதரிகளும் அதிக அளவில் வரவேற்றுள்ளனர். வரும் ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தி பண்டிகை வர இருக்கிறது. இது மக்களுக்கு ஒரு புதிய ஆண்டு. பெண்களுக்காக நாங்கள் அறிவித்த திட்டத்தின் கீழ் மகர சங்கராந்தியன்று பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.30,000 வரவு வைக்கப்படும். 

ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியை முன்னிட்டு இந்த நிதியுதவி வழங்கப்படும். அந்த வகையில், இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் நமது பெண்கள் ரூ.1.5 லட்சம் நிதி உதவி பெறுவார்கள். பணவீக்கம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிதியுதவி அவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.

அறுவடைத் திருவிழாவாகவும், சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படும் இந்த பண்டிகை, தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.