வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எஸ்.ஐ.ஆர் பற்றிய முழு விவரம்
BBC Tamil November 13, 2025 02:48 AM
Getty Images

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர், Special Intensive Revision - SIR) இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு உட்பட மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற இருக்கின்றன.

பிகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர் பல சர்ச்சைகளுக்குள்ளானது. தமிழ்நாட்டிலும் ஆளும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில் அதிமுகவும் பாஜகவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் எழுந்துள்ளன. எஸ்.ஐ.ஆர் பற்றி வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

எஸ்.ஐ.ஆர் என்றால் என்ன?

வாக்காளர் பட்டியலைப் பொருத்தவரை தேர்தல் ஆணையம் இரண்டு விதமான பணிகளை மேற்கொள்கிறது. ஆண்டுதோறும் சிறப்பு சுருக்க திருத்தம் (எஸ்.எஸ்.ஆர்) - Special Summary Revision (SSR) தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

எஸ்.எஸ்.ஆர் நடைமுறையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மற்றும் வாக்காளரின் சுய விவரங்களில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற பணிகள் நடக்கின்றன. இது அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும்.

எஸ்.ஐ.ஆர் என்பது தேவையைப் பொருத்து தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் கடைசியாக 2002-2005 காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்பட்டது. எஸ்.எஸ்.ஆர் போல அல்லாமல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படுகிற போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசியாக 2025-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ஆம் தேதி முடிவடையும் எஸ்.ஐ.ஆர் பணிகள் 5 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தப் பணிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும். இதற்காக அவர்களுக்கு அக்டோபர் 27 முதல் நவம்பர் 3 வரை சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

  • வீடுதோறும் கணக்கெடுப்பு: 04.11.2025 - 04.12.2025
  • வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - 09.12.2025
  • பெயர்களை சேர்த்தல் மற்றும் ஆட்சேபம் தெரிவித்தல் - 09.12.2025 - 08.01.2026
  • விசாரணை மற்றும் சரிபார்த்தல் - 09.12.2025 - 31.01.2026
  • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - 07.02.2026
ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடக்கும்?

முதல் கட்டம்: வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவருமே புதிதாக கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்தப் படிவத்தை ஒவ்வொரு பாகத்திலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டிற்கே வந்து வழங்குவார்கள்.

வாக்காளர்கள் அந்தப் படிவங்களை பூர்த்தி செய்து அவர்களிடம் வழங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை அலுவலர்கள் செல்வார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. படிவத்தை சமர்பித்ததற்கான அத்தாட்சி நகலும் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் அதே முகவரியில் வசிக்கிறார்களா, யாரேனும் இறந்துவிட்டார்களா அல்லது நிரந்தரமாக வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டார்களா என்பதை அலுவலர்கள் சரிபார்ப்பார்கள். இது நவம்பர் 4 முதல் டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும்.

இரண்டாம் கட்டம்: டிசம்பர் 4-ஆம் தேதி வரை வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு, முந்தைய வாக்காளர் பட்டியலுடன் பொருந்திப் போகிறதா என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆராய்வார்கள். ஏதேனும் முரண்பாடு இருந்தால் வாக்காளரிடம் விளக்கம் கேட்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தக் காலகட்டத்தில் புதிய வாக்காளர்களை பதிவு செய்ய முடியாது. இவை அனைத்துமே ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களுக்கு மட்டுமே.

Getty Images

மூன்றாம் கட்டம்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகே புதிதாக வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, பழைய வாக்காளர்கள் வேறு இடத்தில் புதிதாக பதிவு செய்ய வேண்டுமென்றாலோ, அல்லது புதிதாக யாரேனும் இணைக்கப்பட்டதற்கு ஆட்சேபனை இருந்தாலோ அதற்கான விண்ணப்பம் மூலம் முறையீடு செய்யலாம். இதை டிசம்பர் 9 தொடங்கி ஜனவரி 8-ஆம் வரை தேதி மேற்கொள்ளலாம்.

நான்காம் கட்டம்: வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை வாக்காளர் பதிவு அலுவலர் (ஈ.ஆர்.ஓ) ஆராய்வார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் துணை வாக்காளர் பதிவு அலுவலர் இருப்பார்கள். இவை ஆராயப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

ஐந்தாம் கட்டம்: இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர் என்ன செய்ய வேண்டும்?

ஒரு வாக்காளர் அதே முகவரியிலேயே தொடர்ந்து வசிக்கிறார் என்றால் கணக்கெடுப்பு படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும்.

கணக்கெடுப்பு படிவத்தை சமர்ப்பிக்கின்ற போது எந்த ஆவணமும் உடன் சேர்த்து வழங்க வேண்டியதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் வழங்க முடியாதவர்கள் ஆட்சேபனை மனுக்கள் சமர்ப்பிக்கும் கட்டத்திலும் தங்களின் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

குடும்பத்தில் சிலர் மட்டும் வெளியூரில், வெளிநாட்டில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

வாக்காளர்கள் தங்கள் பெயரை நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்றாலும் கல்வி, வேலை நிமித்தமாக யாரேனும் வெளியூரில் இருந்து, நேரடியாக வர முடியாத சூழல் இருந்தால் குடும்ப உறவினர் ஒருவர் அவர் சார்பில் உத்தரவாதம் வழங்கி பூர்த்தி செய்யலாம் எனத் தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். படிவத்தில் அதற்கான தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஒரே ஊரில் வேறு முகவரியில் வசித்தால் என்ன செய்ய வேண்டும்?

சில குடும்பங்கள் ஒரே ஊரில் வேறு பகுதிகளில் வசித்தால் கணக்கெடுப்பு நடக்கின்றபோது அவர்களின் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

Getty Images யாருக்கு சிக்கல் ஏற்படலாம்?

நிரந்தர முகவரி அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் கூட வசிக்கவில்லையென்றால் அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.

வாக்காளர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டார்களா என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பின்போது பதிவு செய்கிறார்கள். பல குடும்பங்கள் வேறு ஊர்களில் நிரந்தரமாக வசித்து வந்தாலும் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்க்கு சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்ற வழக்கமுண்டு.

இந்தச் சூழலில் அவர்களால் முந்தைய முகவரியில் கணக்கெடுப்பு படிவத்தை வழங்க முடியவில்லையென்றால் அவர்கள் பெயர் அங்கிருந்து நீக்கப்படும். அவர்கள் தற்போது வசிக்கும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் புதிதாக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தை வழங்கி தங்களின் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

கணக்கெடுப்பு பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தச் சூழலில் நோட்டீஸ் பெறப்பட்டவர்கள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.

01.07.1987-க்கு முன்பு பிறந்தவர் என்றால் அவருடைய பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்.

01.07.1987 - 02.12.2004 காலகட்டத்தில் பிறந்தவர்கள் என்றால் வாக்காளர் மற்றும் அவரின் தந்தை அல்லது தாயின் பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்.

02.12.2004-க்கு பிறகு பிறந்தவராக இருந்தால் வாக்காளர், அவரின் தந்தை மற்றும் தாய் என மூவரின் பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்.

இவை அனைத்துமே கணக்கெடுப்பு படிவம் சமர்பித்து தேர்தல் அலுவலரால் விளக்கம் கேட்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஆனது.

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
  • அரசு ஊழியர் அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய ஆணை
  • அரசாங்கம் அல்லது பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் (1987-ஆம் ஆண்டுக்கு முன்பு)
  • பிறப்பு சான்றிதழ்
  • கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
  • பள்ளி அல்லது கல்வி சான்றிதழ்
  • நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்
  • வன உரிமைச் சான்றிதழ்
  • சாதிச் சான்றிதழ்
  • மாநில அரசு/உள்ளாட்சி அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட குடும்ப பதிவேடு
  • அரசால் வழங்கப்பட்ட நிலம்/வீடு ஒதுக்கப்பட்ட சான்று
  • ஆதார் அட்டை
Getty Images தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது?

தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சவடி நிலை முகவர்களுக்கு தனித்தனியாக பயிற்சி வழங்குகிறது. கணக்கெடுப்பு பணியில் வாக்குச்சாவடி முகவர்கள் உதவியாக இருப்பார்கள் என இந்தப் பணியில் ஈடுபடும் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இவை போக அரசியல் கட்சிகளும் தங்களின் வாக்குச்சாவடி முகவர்களையும் எஸ்.ஐ.ஆர் பணிக்காக தயார்படுத்தி வருகின்றன.

வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை முகவர்களின் தொடர்பு விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.