மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள ஜடெருவா பகுதியில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவம், ஒரு பழைய வீட்டில், வீட்டு உரிமையாளர், கோதுமையும், அங்கீகாரம் பெறாத அதிக அளவிலான (பூச்சிக்கொல்லி) ‘சல்பாஸ்’ (pesticide) மாத்திரைகளை சேமித்து வைத்துச் சென்ற காரணத்தால் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகள் வேதியியல் மாற்றம் அடைந்து, அபாயகரமான வாயுவை வெளியேற்றியுள்ளன. அந்த வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த குடும்பத்தினர், இரவில் தூங்கும்போது இந்த விஷ வாயுவை சுவாசித்ததன் விளைவாக, 4 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனின் பெற்றோரும் மற்ற பெண் குழந்தையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், வீட்டு உரிமையாளர் மீது கவனக்குறைவு மற்றும் அபாயகரமான பொருளைப் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்ததற்கான குற்றங்களைப் பதிவு செய்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சல்பாஸ் போன்ற கொடிய விஷப் பொருட்களைக் கையாளும்போதும் சேமித்து வைக்கும்போதும் கட்டாயப் பாதுகாப்புக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.