டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடந்து நாடு முழுவதும் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், அதிகாரிகளின் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டு நிரப்பிய காரை ஓட்டிச் சென்ற காஷ்மீர் மருத்துவர் உமர் முகமது, குண்டு வெடிப்புக்கு முன் சுமார் 3 மணி நேரம் காரிலேயே செங்கோட்டை கார் பார்க்கிங் அருகில் அமர்ந்திருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில், “உமர் முகமது மதியம் 3.19 மணிக்கு செங்கோட்டை அருகே உள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்தினார். பின்னர் மாலை 6.28 மணி வரை அவர் காரிலிருந்து கீழிறங்கி வெளியில் வரவில்லை. அந்த மூன்று மணி நேரத்திலும் காரை விட்டு எங்கும் செல்லவில்லை. இதனால் அவர் ஏதாவது “சிக்னல்” எதிர்பார்த்து காத்திருந்தாரா, அல்லது இறுதி நேரத்தில் தயக்கமடைந்தாரா என விசாரணை நடந்து வருகிறது.

உமரின் மூலத் திட்டப்படி, செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் கூட்டம் கூடிய நேரத்தில் குண்டு வெடிக்கச் செய்வதே நோக்கமாக இருந்தது. ஆனால் அவர் ஒரு பெரிய தவறு செய்திருந்தார். செங்கோட்டை பொதுவாக திங்கள்கிழமைகளில் மூடப்பட்டிருப்பது அவருக்குத் தெரியவில்லை. அதனால் அன்றைய தினம் பார்க்கிங் பகுதி சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. இதனால் அவர் குழப்பமடைந்து மூன்று மணி நேரம் காரில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் அவர் காரை செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே உள்ள நெதாஜி சுபாஷ் மார்க்கு வழியாக எடுத்துச் சென்றார். அங்கேயே கார் வெடித்து சிதறி, 13 பேர் உயிரிழந்து, 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
என்ஐஏ மற்றும் டெல்லி போலீஸார் இணைந்து 1,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் உமர் முகமது திங்கட்கிழமை காலை ஹரியானா மாநிலம் பாரிதாபாத் நகரில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டதும், 8.13 மணிக்கு டெல்லி எல்லையை கடந்து வந்ததும் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் அவர் மயூர் விஹார், கானாட் வழியாக செங்கோட்டை வந்தார். அவர் கானாட் பிளேஸில் அரை மணி நேரம் காரை நிறுத்தியதும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதனால் “அந்த பகுதியும் இலக்காக இருந்ததா?” என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விசாரணையில், உமர் முகமது அக்டோபர் 31ம் தேதியே தன் மொபைலை அணைத்து விட்டதாகவும், அதன் கடைசி லொக்கேஷன் பாரிதாபாத் பல்கலைக்கழகமாக இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. குண்டு வெடிப்புக்குப் பிறகு காரில் எதுவும் எரிந்ததால், “புது சிம் கொண்ட இரண்டாவது மொபைல் பயன்படுத்தியிருக்கலாமா?” என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
புலனாய்வாளர்கள் இது குறித்து கூறுகையில், “உமர் முகமது பார்க்கிங் பகுதியில் குண்டு வெடிக்கச் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால் செங்கோட்டை அன்றைய தினம் மூடப்பட்டிருந்ததால் கூட்டம் இல்லாமல் போனது. இதனால் அவர் பதற்றமடைந்து சாலையில் காரை இயக்கியபோது வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம்” என்று தெரிவித்தனர்.
உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், இது திட்டமிட்ட தற்கொலை தாக்குதல் அல்ல. பதட்டத்தில் வெடித்து விட்ட தாக்குதல். ஏனெனில், குண்டு சரியாக பொருத்தப்படாததால் அதன் தாக்கம் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. என்ஐஏ தற்போது அவரது பயண வழித்தடம், தொடர்புகள் மற்றும் பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் இணைப்புகள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!