குமரி: `காமராஜர் படம் போடாதது ஏன்?' - எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்த காங்கிரஸ்!
Vikatan November 13, 2025 03:48 AM

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வுக்கு (எஸ்.ஐ.ஆர்) எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க-வினர் திரளாக கலந்து கொண்டனர். அதே சமயம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் மற்றும் தாரகை கதர்பர்ட் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் திரும்பிச் சென்றனர். காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்ததற்கான காரணம் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்டிடம் பேசினோம். அவர் கூறுகையில், "எஸ்.ஐ.ஆர் விவகாரத்தை மிகவும் கஷ்டப்பட்டு வெளியே கொண்டுவந்தது ராகுல் காந்திதான். இது கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டம். அந்த ஆர்ப்பாட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் போர்டில் தி.மு.க-வின் முன்னோடிகளான பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அதே சமயம் காமராஜரின் புகைப்படம் இல்லை. காமராஜர் இல்லாமல் இருந்தால் அரசியலே இல்லை.

காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்

அது மட்டும் அல்லாது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் புகைப்படங்கள் குட்டி சைசில் இருந்தன. அவர்களின் தலைவர்களது போட்டோக்களை பெரிதாக போடும்போது எங்கள் கட்சித் தலைவர்களின் போட்டோக்களை பெரியதாக போடவேண்டும் என நாங்கள் எதிர்பார்ப்போம்தானே. தி.மு.க மாநாடு என்றால் அவர்கள் எப்படியும் போட்டுக்கொள்ளலாம். கூட்டணிக் கட்சிக்கு என ஒரு தர்மம் இருக்கிறது. அதனால் நாங்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தோம்" என்றார்.

நாகர்கோவிலில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இது குறித்து நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் கூறுகையில், ``காமராஜர் படம் வைக்காததால் தான் நாங்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்தோம். காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் திங்கள்கிழமை எஸ்.ஐ.ஆரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.

இது குறித்து தி.மு.க தரப்பில் விசாரித்தோம். "எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான போராட்டத்துக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான பேனர்தான் அச்சடிக்கப்பட்டுள்ளது" எனச் சுருக்கமாகத் தெரிவித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.