ஜப்பான் அரசியலில் பெரும் திருப்பமாக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி சூழ்நிலையில், பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (64) பதவியேற்றுள்ளார். பழமைவாத கொள்கைகள் கொண்ட தகைச்சி, எம்.பி.யாக இருந்த காலத்திலேயே சிக்கன ஆட்சியை வலியுறுத்தி வந்தவர்.

பொருளாதார வீழ்ச்சி மற்றும் மக்கள் அதிருப்தி மத்தியில் பிரதமராக பொறுப்பேற்ற அவர், நாட்டின் நிதிநிலைச் சிக்கலை சமாளிக்க சம்பளக் குறைப்பு என்ற கடினமான முடிவை எடுத்துள்ளார். இதன் முதல்கட்டமாக, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்கும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக “பொது ஊழியர் ஊதிய சட்டம்” திருத்தப்பட உள்ளது. அதற்கான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜப்பான் நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.தற்போது, ஜப்பானில் எம்.பி.க்களுக்கு மாதம் 12.94 லட்சம் யென் (சுமார் ரூ.7.42 லட்சம்) வழங்கப்படுகிறது. இதற்கு மேலாக, பிரதமருக்கு 11.52 லட்சம் யென் (ரூ.6.60 லட்சம்) மற்றும் அமைச்சர்களுக்கு 4.89 லட்சம் யென் (ரூ.2.81 லட்சம்) கூடுதலாக வழங்கப்படுகிறது.
ஆனால், புதிய சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பிரதமர் 30% மற்றும் அமைச்சர்கள் 20% சம்பளத்தை திருப்பி வழங்கும் முடிவை எடுத்துள்ளனர்.இதனால், பிரதமரின் சம்பளம் ரூ.2.24 லட்சம், அமைச்சர்களின் சம்பளம் ரூ.63 ஆயிரம் அளவிற்கு குறையவுள்ளது என்று தலைமை அமைச்சரவை செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த முடிவு, எதிர்க்கட்சிகளிடமிருந்து வெகுவாக பாராட்டுகள் பெற்றுள்ள நிலையில், ஆளும் கட்சியிலேயே சில அதிருப்திக் குரல்கள் எழுந்து வருகின்றன.இந்த நடவடிக்கை, “ஜப்பான் அரசியலில் பொருளாதார ஒழுக்கத்தின் புதிய யுகம் தொடங்குகிறது” என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.