டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட MRP விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு ஒரு புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, தலைநகர் சென்னையில் உள்ள சுமார் 70 கடைகளில் சோதனை அடிப்படையில் இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், எம்.ஆர்.பி. விலையில் மட்டுமே மதுபானங்கள் விற்கப்படுவது கட்டாயமாக்கப்படும்.
இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டுள்ள சட்டரீதியான அதிகபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பாக, விற்பனையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, வாடிக்கையாளர்கள் ‘டைனமிக் கியூ ஆர் கோடு’ மூலம் மட்டுமே பணம் செலுத்தும்படி வசதி செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் பணப் பரிவர்த்தனையில் நடைபெறும் முறைகேடுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டபின்பு, படிப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இது அமல்படுத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.