சென்னைக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற கோவளம் கடற்கரை, 2025–26 ஆண்டிற்கும் சர்வதேச ‘நீலக் கொடி’ (Blue Flag) சான்றிதழைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகும். சுற்றுச்சூழல் கல்விக்கான டென்மார்க் அறக்கட்டளை நிர்ணயித்த உலக தரநிலைகளை பூர்த்தி செய்ததாக ப்ளூ பிளாக் இந்தியா அமைப்பு செங்கல்பட்டு கலெக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

கடற்கரையின் நீர் தரம், தூய்மை, பாதுகாப்பு, கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கல்வி உள்ளிட்ட 33 முக்கிய நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த அங்கீகாரம், ஆண்டுதோறும் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் முதல் ‘நீலக் கொடி’ கடற்கரையாக 2021ல் அங்கீகாரம் பெற்ற கோவளம், இதனை தொடர்ந்து தக்க வைத்துள்ளது. பார்வையாளர்களுக்காக மூங்கில் நிழற்குடைகள், உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள், ஓய்வெடுக்கும் நாற்காலிகள், மிதக்கும் சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உயிர்காப்பாளர்கள் கடமைப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2024–25 ஆண்டில் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவளம் கடற்கரையைப் பார்வையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் மற்ற 10 கடற்கரைகளுக்கும் ப்ளூ பிளாக் சான்றிதழ் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். “கோவளம் கடற்கரையின் வெற்றிக்கு தமிழக அரசின் அர்ப்பணிப்பும், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் காரணம்,” என்று அவர் பாராட்டியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!