டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா, நாட்டில் பதட்டமான சூழல் நிலவுவதாகவும், முக்கியத் தாக்குதல்களுக்கு இன்றும் பதில்கள் கிடைக்கவில்லை என்றும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு குறித்த கேள்விகள்:
"பிரதமர் பூடானுக்குச் சென்றுவிட்டார். ஆனால் நாட்டின் தலைநகரிலேயே குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது யார் திட்டமிட்டது, என்ன வகையான குண்டுவெடிப்பு என அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்காதது அச்சமான சூழலை உருவாக்கியுள்ளது," என்று அவர் கூறினார்.
புல்வாமா தாக்குதல் விமர்சனம்:
"புல்வாமா தாக்குதலில் 350 கிலோ ஆர்.டி.எக்ஸ் (RDX) எப்படி அந்தப் பகுதியை அடைந்தது என்பதற்கு இன்றும் பதில் கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. அப்போதைய ஆளுநர் சத்யபால் மாலிக் பலமுறை கேள்வி எழுப்பியும் பதில் இல்லை. இப்போது டெல்லியில் அதிக வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதும், இந்த குண்டுவெடிப்பும் மத்திய அரசின் தோல்வியையே காட்டுகிறது," என அவர் சாடினார்.
மேலும், சில நாட்களுக்கு முன் டெல்லி விமான நிலையத்தில் நடந்த தொழில்நுட்பத் தாக்குதல் குறித்தும், அதனால் 800 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்ட குறித்தும் மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றும், பதில்கள் கிடைக்காதபோது நாட்டில் பயமும் பதற்றமும் நிலவுவதாகவும் பவன் கெரா தெரிவித்துள்ளார்.