அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்ட விவகாரத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) செங்கோட்டையனுக்கு எதிராக ஆதாரங்களை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
செங்கோட்டையன் கடந்த ஆறு மாதங்களாகவே கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததாலேயே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இ.பி.எஸ். குறிப்பிட்டுள்ளார். மேலும், செங்கோட்டையனின் கட்சி விரோதச் செயல்பாட்டை நிரூபிக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியையும் இ.பி.எஸ். சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் கீழ் விவசாயிகள் நடத்திய ஒரு நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்த செங்கோட்டையன், பின்னர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் இடம்பெற்றிருந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்று இ.பி.எஸ். குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், புகைப்பட ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இது போன்ற கட்சிக்கு எதிரான தொடர் செயல்பாடுகளே செங்கோட்டையன் நீக்கத்திற்குக் காரணம் என்று இ.பி.எஸ். தெளிவுபடுத்தியுள்ளார்.