சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் இல்லத்திற்கு இன்று மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, சீமானின் வீட்டில் தீவிரச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த இந்தச் சோதனையில், வீட்டில் எந்தவிதமான வெடிகுண்டுகளும் கண்டறியப்படவில்லை.
சோதனைக்குப் பின்னர், விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது சீமானின் வீட்டிற்கும் மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் பிரபலங்களுக்கு எதிராகத் தொடரும் இத்தகைய மிரட்டல் சம்பவங்கள் சமூகத்தில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.