வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அதிகாலைப் பொழுது
'மை விகடன்' '
தீபாவளி ரிலீஸ் படங்கள்
பார்த்த அனுபவம்'...
உறங்கிக் கொண்டிருந்த
நினைவலைகளைத்
தட்டி எழுப்பியது.
ஒன்றா இரண்டா .. நினைவு தெரிந்த நாள் முதலா பட்டாசு, இனிப்பு பலகாரங்கள் அவ்வளவு ஏன் புது டிரஸ் எடுக்காவிட்டால் கூட பரவாயில்லை
தீபாவளியை சினிமா இல்லாமல் கடந்ததில்லை நான்!
தீபாவளி அன்று நிச்சயம் படம் பார்த்தே ஆக வேண்டும் . இல்லாவிட்டால் அது தீபாவளியே இல்லை என்பதுதான் என்னுடைய கொள்கை.
என் அப்பா எனக்காக திரையரங்கில் அலுவலக ஊழியரிடம் சொல்லி டிக்கெட் வாங்கி தந்து விடுவார்.
78 தீபாவளி.. தாய் மீது சத்தியம் திரைப்படம்.. தலைவர் மனதிற்குள் நுழைந்த தருணம்.
83 தங்கமகன் 84 நல்லவனுக்கு நல்லவன் 85 படிக்காதவன் 86 மாவீரன்...
இப்படி பிடித்த தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களை பார்த்த தருணங்களை அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது.
இதில் ஒரு வேடிக்கை என்னன்னா எப்போதெல்லாம் ரஜினி படம் ரிலீஸ் ஆகிறதோ அப்போதெல்லாம் கமல் படமும் ரிலீஸ் ஆகும்.
நான் ரஜினியின் பரம ரசிகை என்பதால் கமல் படம் ஃப்ளாப் ஆகணும்னு பிள்ளையாருக்கு 108 தோப்புக்கரணங்கள் போட்டதையெல்லாம் இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும் நிகழ்வுகள்.
.. இப்படி சினிமா பைத்தியமான எனக்கு அமைந்த புகுந்த வீடோ சினிமாவே பிடிக்காதவீடு. .
திருமணத்தின் போது நினைத்தேன் தலை தீபாவளிக்கு அப்பா வீட்டுக்கு போறப்ப அப்பா நிச்சயம் நமக்கு தீபாவளி ரிலீஸ் படத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுப்பார். அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.
ஆனால் எதிர்பாரவிதமா அப்பா தவறியதால் அந்த வருடம் தலை தீபாவளி இல்லை. புகுந்த வீட்டில் தான் அந்த வருடதீபாவளி .
மனசு முழுக்க அப்பா தவறிய சோகம் ஒரு பக்கம் தீபாவளி ரிலீஸ் படம் பார்க்காத வருத்தம் ஒரு பக்கம். ஏதோ ஒப்புக்கு வீட்டில் பேசிக் கொண்டிருந்து விட்டு உறங்கச் சென்றுவிட்டேன்.
மாலை 4 மணி இருக்கும் என்னவர் என்னை எழுப்பி ,கிளம்பு வெளியே செல்லலாம் என்றார்.
நான் வரலைன்னு சொல்ல ,
ஒரு மாறுதலுக்காகவாது வெளியில் சென்று வரலாம் ன்னு கூப்பிட அரைகுறை மனதோடு எங்கு செல்கிறோம் என்று கூட கேட்காமல் ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்தேன்.
வழி நெடுக ஏதேதோ சிந்தனைகள். வீதியெங்கும் பட்டாசு வெடிகளின் சத்தம் , புகைகளுக்கு நடுவில் கதாநாயகனும் கதாநாயகியும் பயணிப்பது போல் ..
வடபழனி கமலா தியேட்டரில் வண்டி நிற்க, அவர் இறங்கச் சொல்ல ,நிமிர்ந்து பார்க்கையில் இயக்குனர் சிகரத்தின் 'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படபோஸ்டர்.
அப்பொழுதுதான்
அன்பு
எனும் சொல்லின்
அர்த்தம் அறிந்தேன்
அவர் கையிலிருந்த
டிக்கெட் டுகளில்..!
வாழ்வியல் உறவுகளைப் பேசிய புதுப்புது அர்த்தங்கள்.. திரைப்படம் எனக்குள் எதை எதையோ கற்பித்தது.
அன்புக்கும் வெறுப்பிற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் உண்டு.. சற்று தாண்டினாலும் .. அது வேறொரு அர்த்தத்தை கொடுத்து விடும் என்பதை துல்லியமாக இயக்குனர் சிகரம் சொல்லி இருந்த விதம்.. கவிதை!
கணவன் மேல அளவுக்கு மீறி பாசம் வச்ச கீதா, பொஸசிவ்னஸ் கொண்ட மனைவிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் ரகுமான், விசுவாசமான பி .ஏ விவேக்கின் 'இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்' அழியாத தத்துவமான டயலாக், முதிய வயதிலும் பரஸ்பர அன்புடன் வாழும் பூர்ண விஸ்வநாதன் சௌகார் ஜானகி தம்பதிகள், ரொமான்ஸ் குறும்புகளோடு ஜனகராஜ், காக்கிநாடா காஞ்சனா அம்மா ஜெயசித்ராவின் கண்டிப்பா மிகுந்த கட்டுப்பாடு, சித்தாராவின் வெள்ளந்தி சிரிப்பு, இசைஞானியின் பாடல்கள்... தீபாவளி இனிப்புகளை போல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்.
மறக்கவில்லை.
குறிப்பாக குருவாயூரப்பா பாடலில் புகைப்படங்கள் ஃப்ரீசாகும் விதம் வேற லெவல்.. கைதட்டி ரசித்த தருணம் இன்னமும் நெஞ்சுக்குள் ...
படத்தில் ஒரு இடத்தில்' நீ சிரிக்கிறப்ப தெரியற அந்த தெத்துப்பல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ன்னு பூரணம் விஸ்வநாதன் சித்தாராவை பார்த்து குறிப்பிடுவார்.அந்த டயலாக்கை இவர் சொல்லி நான் கேட்டது அப்ப நினைவுக்கு வந்து இதழ்களில் புன்னகை பூக்கச் செய்தது தனிக்கதை.
'அழகான நொடிகளுக்குள்ளேயே பயணிக்கிறது
சில திரைப்படங்கள்..
அழகிய நினைவலைகளாய்'
எனக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சு இன்ப அதிர்ச்சி கொடுத்த என்னவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
எது எப்படியோ இன்னமும் தொடர்கிறது எனது தீபாவளி ரிலீஸ் திரைப்பட கொண்டாட்டங்கள்.
இப்பொழுது சற்று வித்தியாசமாக.. திரைப்படம் பார்த்து விமர்சனம் எழுதும் அளவிற்கு ...
இனியும் தொடரும்!
"சினிமாவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பது முக்கியம். சினிமா பார்ப்பது பிடிக்கும்ன்னா அதுவே உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் விஷயமாக இருக்கும்.
அதை ஒரு அலுப்புடனோ, சலிப்புடனோ, பார்த்தால் மன அழுத்தமாக மாறும்; பிடித்து செய்தால் எந்த காரியமும் நம் அழுத்தத்தை நம் மன அழுத்தத்தை போக்கக்கூடியதுதான்' .
என்னைப் பொறுத்தவரை என்னுடைய stressbuster திரைப்படங்கள் பார்ப்பது தான்.
பி.கு(இந்த வருட தீபாவளி ரிலீஸ்? உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. Dude பார்த்தேன்.. விமர்சனம் செய்யும் அளவுக்கு அந்தப் படத்தில் எதுவும் இல்லை.முடியலடா சாமி !
தீபாவளிரிலீஸ்.. படம் பார்த்த அனுபவம்.. தலைப்பு கொடுத்த
மை விகடனுக்கு
ஒரு கிலோ 'மைசூர்பா 'பார்சல்
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
my vikatan
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.