பலமுறை உடலுறவு வைத்துக்கொண்ட பின்னர் திருமணம் செய்ய மறுப்பதாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இளைஞர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “தனிப்பட்ட உறவு தகராறுகளில் குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தும் போக்கு அதிகரிப்பதைச் சரிபார்க்க வேண்டும். இருவரின் சம்மதத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டு உறவு முறிந்த பின்னர் தகராறு ஏற்பட்டால், குற்றவியல் வழக்குத் தொடர இயலாது” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், தனிப்பட்ட அல்லது உணர்ச்சி ரீதியான தகராறுகளைத் தீர்க்க குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும், தனிப்பட்ட ஏமாற்றத்தை ஒரு குற்றவியல் செயல்முறை வழக்காக மாற்ற முடியாது என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.
நீதிபதி தொடர்ந்து தனது கருத்தைப் பதிவு செய்கையில், “சமகால சமூகத்தில் தனிப்பட்ட உறவுகளின் மாறிவரும் வரையறையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். வற்புறுத்தல், ஏமாற்றுதல், அல்லது இயலாமையால் சம்மதம் பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது. இருவர் சம்மதத்துடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு, தகராறு என்றவுடன் குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்துவது சட்டச் செயல்முறையைத் துஷ்பிரயோகம் செய்வதற்குச் சமம்.
தனிப்பட்ட முரண்பாட்டைத் தவறான நடத்தை என்று சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை” எனக் கடுமையாகக் கருத்து தெரிவித்தார். மேலும், இருவரும் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தது இணைய உரையாடல்கள் மூலம் தெளிவாகியுள்ளதால், இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.