அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பயன்பாட்டால் வளர் இளம் பருவத்தினரிடைய சர்க்கரை நோய் அதிகரித்து வருவதாக மதுரை அரசு மருத்துவமனை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் முதன் முதலாக சர்க்கரை நோய் சிகிச்சைக்காக தனித்துறை தொடங்கி சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு அனைத்து வகையான சர்க்கரை நோய்க்கும் சிகிச்சை அளிக்கும் விதமாக, இந்த சிகிச்சைப் பிரிவில் இளஞ்சிறார் டைப் 1 சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவு, கர்ப்பகால சர்க்கரை சிகிச்சைப் பிரிவு, டைப் 2 சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவு, சர்க்கரை கால் பாத கவனிப்பு பிரிவு போன்றவை செயல்படுகிறது. தற்போது 75 ஆயிரம் பேர் பதிவு செய்து சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு பிறகு வளர் இளம் பருவதினரில் சர்க்கரை நோய் பாதிப்பு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வளர் இளம் பருவ உடல் பருமன் மற்றும் சாக்கரை நோய் பாதிப்பு, பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியரிடம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்கள் கள மருத்துவ ஆய்வு செய்துள்ளனர்.
இதற்காக மருத்துவ நிபுணர்கள் மதுரை சுற்றுப்புறங்களில் உள்ள நகர் மற்றும் ஊரக பள்ளிச் சிறார்கள் 10 முதல் 18 வயது வரை நகர்புற பள்ளிகளில் 1,631 பேர், ஊரகப் பகுதி பள்ளிகளில் 1,564 பேர் என மொத்தம் 3,195 பேர் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் நகர்ப்புற பகுதியில் 8.8 சதவீதம் பேரும், ஊரகப் பகுதியில் 7.6 சதவீதம் பேரும் உடல் பருமன் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால், இவர்களுக்கு உயர் இரத்த சர்க்கரை அளவு கண்டறியப்பட்டது. இதில் 2 சதவீதம் பேர் முற்றிலும் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உடல் பருமன் உள்ள பள்ளி மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேரிடம் கல்லீரல் கொழுப்பு அதிகம் காணப்பட்டுள்ளதாகவும், 34 சதவீதம் பேரிடம் ரத்த அழுத்தம் அதிகரித்து இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதில், 20 சதவீதம் பேரிடம் உயர் சதவீதம் கொலஸ்ட்ரால் அளவு கண்டறியப்பட்டுள்ளதோடு, உடல் பருமனான மாணவிகளிடையே சினைப்பை நீர்க்கட்டிகள் கண்டறியப்பட்டன என்றும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்துக்கும் முக்கிய அடிப்படை காரணிகளாக உயர் கலோரி நொறுக்குத் தீனிகள், வெளி விளையாட்டு, நடைப் பயிற்சி இல்லாமல் இருப்பது, அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பயன்பாடு, அதிக பிறப்பு எடை, பெற்றோரிடம் சர்க்கரை நோய் ஆகியவையே காரணம் என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.