தென் சீன கடலில் Fung wong புயல் மையம்: தைவான் நாட்டின் கடலோர, மலைப் பகுதிகளில் இருந்து 8,300 பேர் வெளியேற்றம்..!
Seithipunal Tamil November 14, 2025 07:48 AM

தெற்கு சீன கடலில் ஃபுங்-வாங் புயல் உருவாகியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவான் நாட்டின் கடலோர, மலைப் பகுதிகளில் இருந்து 8,300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த ஃபுங்-வாங் புயல் தாக்கத்தால் ஃபிலிபைன்ஸ் நாட்டில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

ஃபுங்-வாங் புயல் பாதிப்புகள் குறித்து மத்திய வானிலை ஆய்வு நிறுவனம் (CWA)அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த  புயலின் காரணமாக தீவின் கிழக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் கடலோர, மலைப் பகுதிகளில் இருந்து 8,300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அங்கு 6.3 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த புயலின் தாக்கத்தால் ஃபிலிபைன்ஸ் நாட்டில் 27 பேர் உயிரிழந்துள்ளதோடு, இதுவரை 51 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் யிலான் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், புயலால் நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஃபுங்-வாங் புயலின் மையமானது தீவின் தெற்கு முனையிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் மேற்கே நிலை கொண்டுள்ளது. அதன் நிலையான காற்றின் வேகம் மணிக்கு 64.8 கிலோமீட்டராகவும் (64.8 km/h), காற்றுச் சுழற்சிகள் மணிக்கு 90 கி.மீ வரையிலும் எட்டியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், அடுத்த சில மணி நேரங்களில் புயல் மேலும் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மலைப் பிரதேசங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.