சபரிமலைக்கு மாலை போட்ட மாணவனுக்கு அனுமதி மறுத்த கேரளப் பள்ளி! வலுக்கும் கண்டன குரல்!
Seithipunal Tamil November 14, 2025 08:48 AM

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, சபரிமலைக்கு மாலை அணிந்து கறுப்பு உடை அணிந்து வந்த மூன்றாம் வகுப்பு மாணவரை வகுப்பிற்குள் அனுமதிக்க மறுத்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், மலையாள மாதமான விருச்சிகம் (நவம்பர்) முதல் மண்டல பூஜை நாள் (டிசம்பர்) வரை 41 நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வது வழக்கம். இந்த விரத காலத்தில் பக்தர்கள் கறுப்பு நிற உடையணிந்து பள்ளிக்கு வந்துள்ளனர்.

சம்பவ தினமான நவம்பர் 3-ஆம் தேதி, மூன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் சபரிமலை விரத உடையான கறுப்பு நிற ஆடையை அணிந்து பள்ளிக்கு வந்துள்ளார்.

அப்போது, பள்ளி நிர்வாகம் அந்த மாணவரை வகுப்பிற்குள் செல்ல அனுமதிக்க மறுத்து, இது குறித்துப் பெற்றோருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு அந்த மாணவர் பள்ளிக்கு வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்ப்பும், கண்டனமும்:

சமயம் சார்ந்த இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், கேரளாவில் உள்ள பல்வேறு வலதுசாரி குழுக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாணவரின் மத நம்பிக்கையை அவமதிப்பதாகக் குற்றம்சாட்டி, இந்தச் சம்பவத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.