"உண்மையில்லை... அது பொய் புகார்” - பிக்பாஸ் தினேஷ் விளக்கம்..!
Top Tamil News November 14, 2025 09:48 AM

பிரபல சின்னத்திரை நடிகராக இருப்பவர், தினேஷ். இவர், கோவையில் உள்ள பணகுடி எனும் இடத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியது. 

தினேஷ் மீது கருணாநிதி என்பவர் கொடுத்திருக்கும் புகாரில் குறிப்பிட்டுள்ளது என்ன என்றால், பிஎஸ்சி படித்திருக்கும் தன்னுடைய மனைவி நித்திய கல்யாணிக்கு வேலை தேடிக் கொண்டிருப்பதாக தினேஷிடம் தெரிவித்ததாகவும். மேற்படி தினேஷ் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகவும் தனக்கு அங்கு ஆட்கள் இருப்பதாகவும் அதற்கு ரூபாய் 10 லட்சம் வரை தேவைப்படும் அட்வான்ஸ் ஆக ரூபாய் 3 லட்சம் வேண்டும் என தெரிவித்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை நம்பிய கருணாநிதி அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 2022 ஆம் வருடம் பணகுடி அருகே உள்ள தண்டையார் குளத்தில் மூன்று லட்சம் பணத்தை கொடுத்து இருப்பதாகவும், ஆனால் இதுவரை அவருக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனிடையே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தினேஷ் வள்ளியூர் வந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிய வந்ததாகவும் கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து தினேஷை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டதற்கு அவர் பணத்தை கொடுக்காமல் அவரை காரில் அழைத்துச் சென்று பணகுடி அருகே உள்ள சாத்தான்குளம் என்ற ஊரின் அருகில் வைத்து தினேஷ் மற்றும் அவரது அப்பா மேற்படி இரண்டு பேர் சேர்ந்து கருணாநிதியை தாக்கியதாகவும், தாக்குதலில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் பிக் பாஸ் புகழ் தினேஷ் மற்றும் அவரது அப்பா ஆகியோர் மீது நான்கு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதனிடையே வள்ளியூரில் நின்று கொண்டிருந்த தினேஷை பணகுடி காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டன்ர். இதையடுத்து தற்போது தினேஷ் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார்.

செய்தியாளர்களை சந்தித்திருக்கும் தினேஷ், தன் மீதுகொடுக்கப்பட்டுள்ளது பொய் புகார் என்று கூறியிருக்கிறார். தன் மீது புகார் கொடுத்திருக்கும் நபர் யாரென்றே தனக்கு தெரியாது என்றும், தனக்கு எதிராக செயல்படும் ஒரு நபர் இப்படி செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். சினிமா துறையில் சம்பந்தப்பட்டிருக்கும் தனக்கும் மின்சாரத்துறைக்கும் என்ன சம்பந்தம் இருக்கும் என்று கேட்கும் அவர், புகாரில் தான் அவரை தாக்கியிருப்பதாக கூறியிருக்கும் நேரத்தில் தான் வேறு ஒரு இடத்தில் இருந்ததற்கான ஆதாரத்தை ஏற்கனவே கொடுத்து விட்டதாக கூறியிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.