விமானப் பயண எச்சரிக்கை: மும்பை வான்வெளியில் ஜி.பி.எஸ். சிக்னல் தடங்கல் வாய்ப்பு - இந்தியா NOTAM அறிவிப்பு!
Dinamaalai November 14, 2025 10:48 AM

மும்பை அருகிலுள்ள இந்திய வான்வெளியில் விமானப் போக்குவரத்து பாதைகளில் ஜி.பி.எஸ். குறுக்கீடு அல்லது சிக்னல் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக இந்தியா NOTAM மூலம் அவசர எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. நவம்பர் 17ம் தேதி வரை செல்லுபடியாகும் இந்த அறிவிப்பு, அந்தப் பகுதியை வழியாகப் பறக்கும் விமானிகள் மற்றும் விமான நிறுவனங்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

இந்த தகவலை பாதுகாப்பு ஆய்வாளர் டேமியன் சைமன் எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு டெல்லி சுற்றுவட்டாரத்திலும் இதேபோன்ற ஜி.பி.எஸ். குறுக்கீடு பதிவாகி இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) விமான நிறுவனங்களும், விமானிகளும், வான்வழி கட்டுப்பாட்டாளர்களும் (ATC) ஜி.பி.எஸ். ‘ஸ்பூஃபிங்’ சம்பவங்கள் நடந்த 10 நிமிடங்களுக்குள் கட்டாயம் அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. டெல்லி அருகே ஏற்பட்ட சிக்னல் தடங்கல்கள் காரணமாக இந்த எச்சரிக்கைகள் பாதுகாப்பு நோக்கில் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

ஜி.பி.எஸ். ‘ஸ்பூஃபிங்’ என்பது செயற்கைக்கோள் அனுப்பும் உண்மை சிக்னலுக்குப் பதிலாக போலியான சிக்னலை அனுப்பி, விமானத்தின் நிலை, வேகம், நேரம் போன்றவற்றை தவறாக காட்டச் செய்வது. இது வெறும் ‘ஜாமிங்’க்கு மாறானது; ஜாமிங் என்றால் சிக்னல் பகுதியை நிரப்பி உண்மை தகவலைப் பெற முடியாத நிலையை உருவாக்குவது மட்டுமே.

DGCA வெளியிட்ட சுற்றறிக்கையில், “விமானி, ATC கட்டுப்பாட்டாளர் அல்லது தொழில்நுட்ப அலகு யாரேனும் ஜி.பி.எஸ். பாதிப்பை — நிலைத் தவறுகள், வழித்தவறல், GNSS சிக்னல் குறைபாடு, போலி இருப்பிடத் தரவு — கண்டறிந்தால், அவை நிகழ்ந்த 10 நிமிடங்களுக்குள் நேரடியாக தகவல் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை, மும்பை வான்வெளிப் பகுதி வழியாகச் செல்லும் உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களின் பாதுகாப்பை முன்னிட்டு வெளியிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.