தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை!
TV9 Tamil News November 14, 2025 10:48 AM

சென்னை, நவம்பர் 13: தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், தேர்தல் குழு, உயர்மட்ட குழு, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். மிக முக்கியமாக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் எப்படி கூட்டணி அமைக்கலாம், மாவட்டங்களில் என்ன மாதிரியான நிலை காணப்படுகிறது என்பது குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால், இம்முறை கூட்டணி அமைப்பதில் உறுதியான முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதையும் படிக்க : அடுத்தடுத்து அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தமிழகத்தில் பரபரப்பு!!

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்:

இதனிடையே, சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரேமலதா தொடர்ச்சியாக 2 கட்ட பயணத்தை நிறைவு செய்துள்ளார். இந்த சுற்றுப்பயணம் மூலமாக மக்களின் கருத்துகள் என்ன, அவற்றை அறிந்து என்ன மாதிரியாக கட்சியின் நிலைப்பாட்டை மாற்றலாம். என்ன மாதிரியான விஷயங்களை சுற்றுப்பயணத்தின் போது முன்வைக்கலாம் என்பது குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து, வரும் 16ம் தேதி முதல் 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை பிரேமலதா விஜயகாந்த் மேற்கொள்ள உள்ளார். அந்த சுற்றுப்பயணத்தின் போது மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2026 ஜன.9ம் தேதி கடலூரில் நடைபெற உள்ள அக்கட்சியின் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. அதோடு, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்கள் சார்பில் இந்த மாநாட்டிற்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் மாநாட்டிற்கு மக்களை அழைத்து வரும் பொறுப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் பெறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் தேமுதிகவின் முதல் மாநாடு என்பதால், அதனை பிரம்மாண்டமாக நடத்த வேண்டுமென அக்கட்சி தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. அதோடு, இந்த மாநாட்டில் தான் தங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்பதாக விஜயகாந்த் மகன் பிரபாகரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேமுதிகவின் கூட்டணி கணக்கு:

இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்த மாவட்ட செயலாளர்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என அவர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, அந்த கருத்துகளை ஏற்றுக்கொண்டு அதன்பின் முடிவுகளை அறிவிப்பதாக பிரேமலதா கூறியிருந்தார். தேமுதிகவுக்கு அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இம்முறை குறைந்தது 8 எம்எல்ஏக்களை அந்தக் கட்சி பெறவேண்டும். அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் குறைந்தது 10 தொகுதிகளாவது நிச்சயம் கிடைக்கும் என்று அவர் கணக்குப் போட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.. எஸ்ஐஆர் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர்!

அதேசமயம், ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக கடைசி நேரத்தில் தங்களுக்குக் கைவிரித்ததால் அந்தக் கூட்டணியை விட்டு வெளியேறிய பிரேமலதா, திமுகவுடன் இணக்கமாகச் செல்ல முடிவெடுத்தார். எனினும், தற்போது விஜய்யுடன் அதிமுக இணக்கம் காட்டுவதால், அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையுமா? யாருடன் இருந்தால் வெற்றி கனியை பெறலாம் என்ற குழப்பத்திலும் உள்ளதாக தெரிகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.