பணவீக்கத்தைக் குறைத்த ஜி.எஸ்.டி 2.0... மக்களின் சேமிப்பை அதிகரிக்கப் பயன்படட்டும்!
Vikatan November 14, 2025 11:48 AM

கடந்த வாரத்தில் வெளியான பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரங்கள், நல் ஓலையாகவே வந்திருக்கிறது. பணவீக்கம் குறைவில் ஒரு வரலாற்று தருணம் சாத்தியப்பட்டுள்ளது!

கொரோனா காலத்துக்குப் பிறகு வேலையிழப்பு, வருமானக் குறைவு போன்ற பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வந்த மக்களுக்கு, விலைவாசி ஏற்றம் பெரும் சுமையாக இருந்துவந்தது. இதனால், வருமானம் முழுவதையும் செலவு செய்துவிட்டு, கூடுதலாகக் கடன் வாங்கும் நிலைக்கும் ஆளானார்கள். இப்போது, இந்தியாவின் சில்லறை விற்பனை பணவீக்கம் குறித்து மத்திய அரசு வெளி யிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லறை விற்பனை பணவீக்கம் வரலாறு காணாத வகையில் 0.25% ஆகக் குறைந்துள்ளது. 2013-க்குப் பிறகான பணவீக்கத் தொடரில், இதுவே மிகக் குறைந்த அளவு என்பது சிறப்புச் செய்தி.

நுகர்வோர் பணவீக்கம், 2024-ம் ஆண்டு ஜனவரியில் 5.1% ஆக இருந்து, 2025 அக்டோபரில் 0.3% ஆகக் குறைந்துள்ளது. நுகர்வோர் உணவுப் பொருள்களின் பணவீக்கம், 2024 ஜனவரியில் 8.3% ஆக இருந்து, தற்போது மைனஸ் 5.0% ஆகக் குறைந்துள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை குறைந்ததே, பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்துள்ளதற்கு முக்கியக் காரணம். இதற்குப் பின்னணியில் இருப்பது, சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தங்கள்தான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில், இந்தியா மீது அமெரிக்கா அறிவித்த 50% வரிகளுக்குப் பிறகு, பொருளாதாரத்திலும், சந்தையிலும் பல்வேறு நிச்சயமற்ற சூழல்கள் உருவாகின. அவற்றை சமாளிக்கவும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பதைத் தக்கவைக்கவும் மத்திய அரசு ஜி.எஸ்.டி விகிதங்களைக் குறைத்தது. அதன் பலனாக, பல்வேறு பொருள்களின் விலை குறைந்தது. மக்கள், பணத்தை இறுக்கிப் பிடிக்காமல் தேவைகளுக்குச் செலவு களைச் செய்ய வழி பிறந்தது. பணவீக்கமும் குறைந்தது. அக்டோபர் மாதத்தில் வசூலான ரூ.1.7 லட்சம் கோடி நிகர ஜி.எஸ்.டியே அதற்குச் சான்று. ஜி.எஸ்.டி குறைப்பால் மக்கள் நுகர்வை அதிகரிப்பார்கள், அரசுக்கும் வருவாய் குறைவு ஏற்படாது என்று பல பொருளாதார அறிஞர்கள் கூறிவந்தது, நிரூபணமாகியிருக்கிறது.

பணவீக்கம் குறைந்திருப்பது, அடுத்தகட்டமாக வட்டி விகிதக் குறைப்புக்கும் வழிவகுக்கலாம். அப்படிக் குறைக்கப்பட்டால், கடன் வாங்கியிருப்பவர்கள் முதல் புதிதாகக் கடன் வாங்கப் போகிறவர்கள் வரை பலன் அடைவார்கள். பொருளாதாரத்திலும் வளர்ச்சிக்கான சாத்தியங்கள் உருவாகும். ஆனால், மிச்சமாகும் பணத்தில் மக்கள் தேவையில்லாத செலவுகளைச் செய்யாமல், சேமிப்பையும் முதலீட்டையும் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம்.

இப்படியாக நாடும், நாட்டு மக்களும் பொருளாதாரப் பலனடைவது தொடர்ந்தால், 2027-க்குள் நிச்சயம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை இந்தியா எட்டிவிடலாம். அது, நம் அனைவரின் கைகளிலும்தான் இருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.