சமீபகாலமாக வீட்டில் கணவன், மனைவி பிரச்சனை எங்கு பார்த்தாலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. புரிந்து கொள்ளாத மனப்பக்குவம்தான் இதற்குக் காரணம். இதை எப்படி நாம் தீர்ப்பது? குடும்ப ஒற்றுமை மேம்பட என்ன செய்வதுன்னு பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி அருமையான சில டிப்ஸ்களைத் தந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
பெண்களுக்கு சுயமரியாதை என்பது இருக்கிறது. அவர்களுக்கும் சுயகௌரவம் இருக்கு. அதையாவது நாம கொஞ்சம் யோசிக்க வேண்டும். குழந்தை ஒரு தப்பு பண்ணுதுன்னா அதைப் பட்டு பட்டு பட்டுன்னு அடிச்சி அப்ப தான் நீ திருந்துவன்னு அடிச்சி வளர்க்கிறோம். எதுவரைக்கும் அடிச்சி வளர்ப்போம்? அது நம்மைத் திருப்பி அடிக்காத வயசு வர்ற வரைக்கும் நாம அடிச்சி வளர்ப்போம்.
நல்லா வளர்ந்துட்டான். இதுக்கு அப்புறமும் அவனை அடிச்சி வளர்த்தா திருப்பி அடிச்சிருவான்கற பயம் இருக்குது அல்லவா. பெற்ற பிள்ளைகளிடத்திலேயே இவ்வளவு பயம் இருக்கும்போது எங்கிருந்தோ நம்மளை நம்பி நம்மைத் தவிர வேறு யாருமே துணையில்லை அப்படின்னு நம்பி வரும் பெண்தான் மனைவி.
அவளை எவ்வளவு அன்பாகப் பார்த்துக்கணும்? எவ்வளவு அனுசரனையா வச்சிக்கணும்? எவ்வளவு ஆறுதலான வார்த்தைகளால பேசணும்? அதை விட்டுட்டு கேவலமான வார்த்தைகளால பேசுவது, அவளை அடிப்பது, கண்டிப்பது என்பது மிக மிக தவறான ஒரு விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் அன்பாக நாம் அவர்களது தவறைச் சுட்டிக்காட்டினால் போதும். கண்டிப்பாக அவர்கள் திருத்திக் கொள்வார்கள். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தையாவது தெரியப்படுத்துவார்கள். அதனால் இனிமேலும் கட்டிய கணவன்மார்கள் பழைய காலத்தைப் போல குடித்துவிட்டு மனைவியை அடித்து துவம்சம் செய்யாதீர்கள். பெண்கள் வீட்டின் கண்கள். அவர்கள்தான் பிள்ளைகளை நிறைய நேரம் செலவழித்து வளர்க்கிறார்கள்.
வீட்டை சுத்தம் செய்கிறார்கள். குடும்பத்தையே ஒரு கோவிலாக எண்ணி கட்டிக் காக்கிறார்கள். நமக்காக கடவுளிடம் பிரார்த்தனை பண்ணுவது, பார்த்துப் பார்த்து சமையல் பண்ணுவது, துணிமணிகள் எடுப்பது, துவைப்பது என எத்தனையோ விஷயங்களைச் செய்யும் அவர்களை நாம் எள்ளி நகையாடுவதோ, அவர்களது உணர்வுகளைப் புண்டுபத்தும் வகையில் பேசுவதோ கூடாது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.
Author: Sankar Velu