தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கிடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடரும் சூழலில், கட்சி தலைவர் விஜய் பல்வேறு அரசியல் கணக்குகளை அமைதியாக போடுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஜனவரி மாதத்திற்குள் காங்கிரஸ் கூட்டணி உறுதியான முடிவுக்கு வராவிட்டால், பிற கட்சிகளுடன் உடனடி பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று விஜய் ஆலோசனை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு வெறும் 5 மாதங்கள் மட்டுமே இருப்பதால், திமுக – அதிமுக இருபுறமும் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, புலம் பெயர்வு மேலாண்மை, உள்கட்சி சச்சரவுகள் போன்றவற்றில் வேகமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக பெரும்பாலும் அமைதியாக இருந்தது. SIR விவகாரம் உச்சத்தைக் கடந்தபோதும், தவெக பூத் குழுக்கள் கிரவுண்டில் செயல்படாமை கட்சி வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பியது.
சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் விஜய் மற்றும் ஜான் ஆரோக்கியசாமியை ரகசியமாக சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு ராகுல் காந்தி நேரடியாக விஜயுடன் பேசியது இந்த சந்திப்புக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
விஜய் அரசியலுக்கு வந்த நாளிலிருந்து தமது கொள்கை எதிரியாக பாஜகவையும், முக்கிய போட்டியாளராக திமுகவையும் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் காங்கிரஸ் கூட்டணி விஜய்க்கான முதல் விருப்பம் என்பது தவெக வட்டாரத்திலிருந்து வெளிவரும் தகவல்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பல பேட்டிகளில் “தவெகவுடன் கூட்டணி சாத்தியம்” என சைகை காட்டிக் கொண்டிருந்தாலும், இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை. இதற்குக் காரணம் —காங்கிரஸ் கூட்டணியை முன்னுரிமை கொடுத்துள்ள விஜய், அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
ராகுல் காந்தி உடனடியாக முடிவு எடுக்கவில்லை என்பதற்கான முக்கிய காரணம் பீகார் தேர்தல்.அதற்கான ராகுல் கணக்குகள்:பீகாரில் ஆர்ஜேடி–காங்கிரஸ் கூட்டணி வென்றால், திமுகவிடம் சட்டசபைத் தொகுதிகள் அதிகரிக்க கோரலாம்.
NDA வென்றுவிட்டு நிதிஷ் குமார் முதல்வராக்கப்படவில்லை என்றால், அதை தொடர்ந்து தேசிய அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.அப்போது நாடாளுமன்றத்தில் திமுகவின் 22 எம்பிக்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக இருவருக்கும் முக்கியமாகிவிடும்.இதனால், “சிறிது காலம் காத்திருங்கள்” என காங்கிரஸ் தவெகுக்கு தகவல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் இருந்து தெளிவான முடிவு தாமதிக்கையில், விஜய் —அமமுக, சில சிறு கட்சிகள், திமுக கூட்டணியில் அதிருப்தி கொண்டவர்கள் என பல தரப்புகளுடன் ரகசியமாக தொடர்பைத் தொடங்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை காங்கிரஸ் கூட்டணி அமைகிறதெனில்,திமுக கூட்டணியில் உள்ள சில சிறு கட்சிகளை விஜய் தன் அணிக்கு இழுத்துக் கொள்ளலாம் என அவர் நம்புகிறார்.இதனால், 2026 தேர்தலுக்கு முன்னர் தமிழகத்தில் பெரிய கூட்டணி புயல் கிளம்பும் சாத்தியம் அதிகரித்து வருகிறது.