தமிழகத்தில் புராதனக் கோவில்கள் மற்றும் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க அமைக்கப்பட வேண்டிய புராதனச் சின்னங்கள் ஆணையத்தை ஒரு மாத காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முந்தைய உத்தரவில் வழங்கப்பட்ட 4 வார அவகாசம் முடிவடையும் நிலையில், அரசு கோரிய கூடுதல் 3 மாத அவகாசத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகத்திற்குள் அறநிலையத்துறை அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக டி.ஆர். ரமேஷ் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் கடந்த அக்டோபர் 9ம் தேதி ஐகோர்ட்டு கட்டுமானத்துக்கு இடைக்காலத் தடையும், தமிழகத்தில் புராதனச் சின்னங்கள் ஆணையத்தை உருவாக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ். சவுந்தர் ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை, ஆணையத்தை உருவாக்கும் செயல்முறைகள் தொடங்கியுள்ளதாகவும், முழுமையாக அமைக்க 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. மேலும், டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோவில் வளாகத்திலுள்ள அறையை பக்தர்களை கண்காணிக்க பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தது.
மனுதாரர் டி.ஆர். ரமேஷ் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பரிசீலித்த நீதிபதிகள், “தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களிலும், பாரம்பரியச் சின்னங்களிலும் நடைபெறும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க புராதனச் சின்னங்கள் ஆணையம் அவசியம். ஆணையம் உருவாகும் வரை திருவண்ணாமலை கோவிலுக்குள் மற்றும் வெளியில் எந்த வகையான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. முந்தைய தடையை நீட்டிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.

மேலும் “அரசு கோரிய 3 மாத அவகாசம் வழங்க முடியாது. ஒரு மாத காலத்திற்குள் ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு தற்காலிக மாற்று ஏற்பாடுகளை அறநிலையத்துறை மேற்கொள்ளலாம்” என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்குபின், சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கிய முந்தைய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளையும் பெஞ்ச் விசாரித்தது. இந்த பிரச்சினைக்கு தீட்சிதர்கள் நல்ல முடிவுக்கு வர வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி, அந்த வழக்கையும் டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!