மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!
WEBDUNIA TAMIL November 14, 2025 03:48 PM

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் உச்சநீதிமன்ற அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவு இதோ:

தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. மேலும் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் உச்சநீதிமன்ற அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்காமால், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் உள்ள நம் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் என்று ஏற்கனவே அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் டெல்லியில் 1.2.2024 அன்று நடைபெற்றபோது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடகம் கோரியபோதே, திமுக அரசு வாய்மூடி மௌனியாக இருந்ததையும் நான் கண்டித்துள்ளேன்.

அனைத்தையும் மீறி, உச்சநீதிமன்றத்தில் இதுபோன்றதொரு தீர்ப்பு வருவதற்கு, கர்நாடகாவில் உள்ள தங்களுடைய குடும்பத் தொழிலை காப்பதற்காக உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

தமிழகத்தின் உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.