தமிழக அரசு செயல்படுத்தி வரும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ‘ஆணாக இருந்தால் மட்டும் போதும்; மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டு, ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யச் சொல்லி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் திரிக்கப்பட்டது மற்றும் தவறானது என தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அந்தப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி பெறுவதற்கு, மாணவர்கள் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.
அத்தகைய மாணவர்கள், இளங்கலை பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. படிப்புகளைத் தடையின்றி முடிக்கும் வரை மட்டுமே இந்த நிதி, அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். எனவே, ஆணாகப் பிறந்த அனைவருக்கும் நிதி வழங்கப்படும் என்பது முற்றிலும் தவறான தகவல் என்றும், மக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.