திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் அதிரடியாக தெரிவித்துள்ளது,"சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள 13 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கற்பக விநாயகர் கோவில், செட்டிநாடு நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களால் தலைமுறைதோறும் சுழற்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த பாரம்பரிய நிர்வாக முறையை 1978-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தும் உள்ளது.அந்த விதிப்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்த 20 குடும்பங்களில் இருந்து 2 குடும்பத்தினரே அறங்காவலராக நியமிக்கப்பட வேண்டும்.
கண்ணனின் குடும்பமும் முன்பே இந்த பொறுப்பில் பணியாற்றியிருந்ததுடன், இந்த ஆண்டு அவர்களது குடும்பத்தினருக்கே அந்த வாய்ப்பு வரிசையாக கிடைக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நபரின் விருப்பப்படி, சிலர் சட்டத்திற்கு புறம்பாக வேறு நபரை அறங்காவலராக நியமிக்க முயல்வதாகவும், இதனால் பாரம்பரிய முறையே ஆபத்துக்கு உள்ளாகி வருவதாகவும் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, சட்டப்படி இந்த ஆண்டின் அறங்காவலர் பதவி அவர்களது குடும்பத்தாருக்கே வழங்கப்பட வேண்டும் என்றும், அதுவரை பிற நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜராகிய வக்கீல், “எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை” என விளக்கம் அளித்தார்.
இதற்கு நீதிபதி, “தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் இந்த கோவிலாவது முறையாக செயல்படுகிறது என நினைத்தேன்… இங்கும் இப்படிப் பிரச்சினைகள் உள்ளது வருத்தமாக இருக்கிறது” எனக் கருத்து தெரிவித்தார்.இறுதியில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக வரும் 18-ந்தேதி வரை எந்த புதிய முடிவும் எடுக்கக்கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து, விசாரணையை ஒத்திவைத்தார்.