கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றி கழகத்தின் கூட்ட நெரிசல் சம்பவத்தால் 49 பேர் உயிரிழந்தனர் மற்றும் 110 பேர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்கள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கரூர் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஆரம்பத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்துவந்தனர். பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி மேற்பார்வையில் சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் விசாரணையைத் தொடங்கினர்.
சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கு ஆவணங்கள் கரூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. தற்போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, இந்த ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளால் திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இனி, இந்த வழக்கு தொடர்பான ஆவண நடைமுறைகள் அனைத்தும் திருச்சி நீதிமன்றம் மூலமாகவே நடைபெறும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Edited by Mahendran