2030-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பையை ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் இணைந்து நடத்தும் மொராக்கோ, இந்தக் கால்பந்துப் போட்டிக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, பொதுச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தெருநாய்களைக் கொன்றதாக விலங்கு நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
உலகக் கோப்பை இணை-விருந்தோம்பல் நாடாக மொராக்கோ அறிவிக்கப்பட்டதிலிருந்து, தெரு நாய்களைப் படுகொலை செய்வது அதிகரித்துள்ளதாகவும், லட்சக்கணக்கான நாய்களைக் கொல்ல அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சர்வதேச விலங்கு நலன் மற்றும் பாதுகாப்பு கூட்டணி தெரிவித்துள்ளது.
தெருக்களில் சுற்றித் திரியும் சுமார் மூன்று மில்லியன் நாய்களைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கொலைகள் நடப்பதாகக் கூறப்படும் நிலையில், நாய்கள் சுட்டுக் கொல்லப்படுவது மற்றும் கொடூரமான சடலங்களின் படங்கள் வெளிவந்துள்ளன.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மொராக்கோ அரசு கடுமையாக மறுத்துள்ளதுடன், தெருநாய்களைக் கொல்வதற்கும் உலகக் கோப்பைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தெருநாய்களின் மேலாண்மை உள்ளூர் நகராட்சிகளிடம் விடப்பட்டுள்ளது என்றும் விளக்கமளித்துள்ளது.