துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் காந்தா. பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் செல்வமணி செல்வராஜ்.
சாதாரண நடிகராக இருக்கும் துல்கர் சல்மானை ஒரு பெரிய நடிகராக மாற்றுகிறார் சமுத்திரக்கனி. அதன்பின் காந்தா என்கிற தலைப்பில் தனது கனவு படத்தை எடுக்க நினைத்து அதில் துல்கர் சல்மானை நடிக்க வைக்கிறார். ஆனால் படத்தின் கிளைமேக்ஸ் துல்கர் சல்மான் மாற்ற சொல்ல முடியாது என மறுக்கிறார் சமுத்திரக்கனி. இரண்டு பேரின் ஈகோவு எதில் முடிந்தது? சமுத்திரக்கனி தான் நினைத்தபடி படத்தை எடுத்தாரா? என்பதை திரைப்படமாக சொல்லி இருக்கிறார்கள்.
அவமானம், சோகம், கோபம், காதல் போன்ற எல்லா உணர்வுகளையும் கச்சிதமாக பிரதிபலிக்கிறார் துல்கர் சல்மான். ஒரு பெரிய நடிகராக அவர் காட்டும் உடல் மொழியும், அவரின் வசன உச்சரிப்பும் அசத்தல். இன்னும் சொல்லப் போனால் காந்தா படத்தை தனது நடிப்பில் தூக்கி நிறுத்தியுள்ள துல்கர் சல்மானுக்கு விருது கிடைக்க வாய்ப்புண்டு. ஒரு பக்கம் சமுத்திரகனியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு இயக்குனருக்கு என்ன ஈகோ இருக்கும் என்பதை கச்சிதமாக புரிந்து கொண்டு அவரும் பல காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.ராணாவுக்கும் முக்கிய வேடம்..
இசையும் ஒளிப்பதும் படத்திற்கு பெரிய பலம். அதேபோல் இந்த படத்தின் கதாநாயகி வரும் பாக்யஸ்ரீ சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நிழல்கள் ரவி, ஆடுகளம், வையாபுரி, கஜேஸ் நாகேஷ், காயத்ரி சங்கர் ஆகியோரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். படத்திற்கு திரைக்கதை பலமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக படப்பிடிப்பு நடக்கும் காட்சிகளை அடிக்கடி காட்டி கடுப்பேற்றுகிறார்கள். அதை கொஞ்சம் குறைத்திருக்கலாம். திரைக்கதைக்கு அது தடையாக இருக்கிறது.
நாடகப் பாணியாக இருந்தாலும் சுவாரஸ்யமான காட்சிகளால் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ். ஒரு ஈகோ பிரச்சினையை வைத்துக்கொண்டு அழகான திரைக்கதை அமைத்து சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார். காந்தா ஒரு கலைப்படமாக உருவாகியிருப்பதால் எல்லா தரப்பினரும் படத்காதை ரசிப்பார்களா என்பது தெரியவில்லை.