ஒரு வீரரை கூட இழக்காமல் முகலாயர்களை வீழ்த்தி இந்தியாவை வென்ற 'ஷேர்ஷா சூரி'
BBC Tamil November 14, 2025 06:48 PM
Getty Images ஷேர்ஷா சூரி

(2022-ஆம் ஆண்டு வெளியான கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது)

சரித்திரம் நியாயம் செய்யாத பேரரசர்களில் ஷேர்ஷா சூரியும் ஒருவர். ஐந்து ஆண்டுகள் மட்டுமே இந்தியாவை ஆண்ட அவர், இறந்த பத்து ஆண்டுகளுக்குள் அவரது வம்சத்தின் ஆட்சியே முடிவுக்கு வந்துவிட்டது.

"ஐந்தாண்டுகள் மட்டுமே இருந்தாலும்கூட, ஆட்சி செய்யும் துல்லியம் மற்றும் திறமை, கடின உழைப்பு, நீதி, தனிப்பட்ட பண்புகளின் நேர்மை, இந்து - முஸ்லிம் நல்லிணக்கம், ஒழுக்கம் மற்றும் உத்திகளை வகுப்பது ஆகியவற்றில் அவர் அக்பருக்கு குறைந்தவர் அல்ல," என்று ஷேர்ஷாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய காலிகாரஞ்சன் கனுங்கோ குறிப்பிடுகிறார்.

யார் இந்த ஷேர் ஷா?

ஷேர்ஷா சூரியின் உண்மையான பெயர் ஃபரித். அவர் முகலாய ராணுவத்தில் பணியாற்றினார். 1528 இல் பாபரின் சந்தேரி பயணத்தில் உடன் சென்றார். பாபரின் படையில் இருந்தபோது, அவர் இந்தியாவின் சிம்மாசனத்தில் அமர வேண்டும் என்று கனவு காணத் தொடங்கினார்.

Getty Images பாபர்

அப்பாஸ் சர்வானி தனது 'தாரிக்-இ-ஷேர்ஷாஹி' புத்தகத்தில் ஒரு கதையை விவரிக்கிறார். "ஒருமுறை ஷேர்ஷா, பாபருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் சாப்பிடுவதைப் பார்த்து பாபர் தனது சிறப்பு அதிகாரியிடம், 'அவரது ஆளுமையைப் பாருங்கள். சுல்தான் ஆவதற்கான கோடு அவர் நெற்றியில் இருப்பதைக்காண்கிறேன். கவனமாக இருங்கள். முடிந்தால் அவரை காவலில் வையுங்கள்' என்றார்.

"நீங்கள் நினைக்கும் அனைத்தையும் செய்யும் திறன் ஷேர்ஷாவுக்கு இல்லை என்று அந்த அதிகாரி பேரரசரிடம் கூறினார்."

பின்னர் ஷேர்ஷா பிகாரின் குறுநில மன்னரான ஜலால் கானின் அரசவையில் துணைத் தலைவராக பணியாற்றத் தொடங்கினார்.

முகலாய பேரரசர் ஹுமாயூனுடன் போர்

பாபரின் மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் ஹுமாயூன் வங்காளத்தை கைப்பற்ற விரும்பினார். ஆனால் ஷேர்ஷா சூரியின் ஆளுகைப் பகுதி நடுவில் இருந்தது. ஹுமாயூன் அவருடன் போரிடத் தீர்மானித்தார்.

பிரபல வரலாற்றாசிரியர் ஃபர்ஹத் நஸ்ரீன் தனது 'இஃப் ஹிஸ்டரி ஹேஸ் டாட் அஸ் எனிதிங்' என்ற புத்தகத்தில், "ஷேர்ஷாவின் லட்சியம் வளர்ந்தது. ஏனெனில் பிகார் மற்றும் வங்காளம் அவரது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அதனால், அவர் முகலாய பேரரசர் ஹுமாயூனுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறினார். போர்த் திறன் என்று வரும்போது ஹுமாயூனை விட ஷேர்ஷா மிகவும் சிறப்பாக இருந்தார்," என்று எழுதுகிறார்.

RUPA PUBLICATIONS

1537 ஆம் ஆண்டில், இருவரின் படைகளும் சௌசாவில் ஒன்றையொன்று எதிர்கொண்டன. ஆனால் போருக்கு முன் ஹுமாயூன் ஒரு தூதரை ஷேர்ஷாவிடம் அனுப்பினார். அப்துல் காதர் பதாயுனி தனது 'தக்புத் த்வாரிக்' என்ற நூலில், "ஹுமாயூனின் தூதர் முகமது அஜீஸ் ஆப்கானி முகாமை அடைந்தபோது, கொளுத்தும் வெயிலில் ஷேர்ஷா மரக் கட்டைகளை கோடரியால் பிளப்பதைக் கண்டார். தரையில் அமர்ந்து அவர் ஹுமாயூன் அனுப்பிய செய்தியைக் கேட்டார்.

அஜீஸ் இருவருக்கும் இடையே ஒப்பந்தம் செய்து வைத்தார். அதன் கீழ் வங்காளமும் பிகாரும் முகலாயக் கொடியின் கீழ் ஷேர்ஷா சூரிக்கு வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் 1540 , மே 17 ஆம் தேதி கன்னௌஜில் ஹுமாயூன் மற்றும் ஷேர்ஷா சூரியின் படைகளுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

ஹுமாயூனின் படை ஷேர்ஷாவின் படையைக்காட்டிலும் பெரியதாக இருந்தது. ஷேர்ஷாவின் படையில் மொத்தம் 15,000 பேர் இருந்தனர். ஆனால், ஹுமாயூன் படையில் 40,000 ஆட்கள் இருந்தனர். ஆனால் போர் தொடங்கும் முன்பே ஹுமாயூனின் வீரர்கள் அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். ஷேர்ஷா ஒரு வீரரைக்கூட இழக்காமல் வெற்றி பெற்றார்.

இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹுமாயூன்

ஹுமாயூன் ஓடத் தொடங்கியபோது அவரை பின்தொடர்வதற்காக, தனது ராஜபுத்திர சேனாதிபதி பிரம்மாதித்ய கவுரை, ஒரு பெரிய படையுடன் அனுப்பினார்.

"ஹுமாயூனுடன் போரிட வேண்டாம், அவரை பின்தொடர்ந்தால் மட்டும் போதும் என்று கவுருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஹுமாயூன் தனது மீதமுள்ள வீரர்களுடன் எப்படியோ ஆக்ராவை அடைந்தார். ஆக்ராவை அடைந்ததும், தனது கருவூலத்தில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தன் மனைவி தில்தாருடன் மேவாட் வழியாக லாகூர் சென்றார்.

சில நாட்களுக்குப் பிறகு ஷேர்ஷாவும் ஆக்ராவை அடைந்தார். ஆக்ரா மக்களை துன்புறுத்தியதற்காக அவர் தனது சேனாதிபதி பிரம்மாதித்ய கவுரை கடிந்துகொண்டார். பின்னர் அவர் பிரம்மாதித்தன் மற்றும் குவாஸ் கான் இருவரையும் ஹுமாயூனை பின்தொடரும்படி கேட்டுக்கொண்டார்,"என்று அப்பாஸ் சர்வானி எழுதியுள்ளார்.

ஹுமாயூனைப் பின்தொடர்ந்ததன் நோக்கம் அவரைப் பிடிப்பது அல்ல, அவரை இந்தியாவிலிருந்து விரட்டுவது. ஹுமாயூன் எப்படியோ லாகூர் சென்றடைந்தார். அங்கு அவர் சுமார் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். ஏனெனில் அவரை பின்தொடர அனுப்பப்பட்ட ஷேர்ஷாவின் வீரர்கள் மழை காரணமாக முன்னேற முடியவில்லை.

1540 அக்டோபர் மூன்றாவது வாரத்தில் ஷேர்ஷாவின் படைகள் சுல்தான்பூர் ஆற்றைக் கடந்தன. மிர்ஸா முகமது ஹைதர் துக்லத் தனது 'தாரிக்-இ-ரஷிதி' என்ற நூலில், "ஷேர்ஷா லாகூர் நோக்கி அணிவகுத்து வரும் செய்தி கிடைத்ததும், பேரரசர் ஹுமாயூன் அங்கிருந்து ஓடிவிட்டார். அவருடைய ஆட்கள் தங்கள் அலங்கரிக்கப்பட்ட வீடுகளை அதே நிலையில் விட்டுச்சென்றுவிட்டார்கள்," என்று எழுதியுள்ளார்.

ஹுமாயூன் எல்லா பொருட்களையும் அங்கேயே விட்டுவிட்டார். ஆனால் தன்னால் முடிந்த அளவுக்கு பணத்தை எடுத்துக் கொண்டார். அவர் முதலில் காஷ்மீர் செல்ல விரும்பினார் . ஆனால் அவரது தோழர்கள் யாரும் அங்கு செல்லத் தயாராக இல்லை. வழியில், குஷ்ப் அருகே ஹுமாயூனுக்கும் அவரது சகோதரர் காம்ரானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இங்கிருந்து முகலாய ராணுவம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது. ஹுமாயூனுடன் வெகு சில வீரர்களும் அவர்களது மனைவிகளும் சென்றனர். ஹுமாயூன் இந்தியாவின் எல்லையைத் தாண்டியவுடன், அவரைப் பின்தொடர்ந்த குவாஸ் கானும் ஜீலம் நதியின் மேற்குக் கரையிலிருந்து அவரைப் பின்தொடர்வதை நிறுத்தினார்.

பல நெடுஞ்சாலைகள் அமைத்த, தங்கும் விடுதிகள் கட்டிய ஷேர்ஷா

இந்தியா முழுவதும் பல முக்கிய நெடுஞ்சாலைகள் அமைத்ததற்காகவும் விடுதிகள் கட்டியதற்காகவும் ஷேர்ஷா அறியப்படுகிறார். சாலையின் இருபுறமும் அவர் மரங்களை நட்டார். சாலையில் செல்வோர் மரங்களின் நிழலைப் பெற வேண்டும் என்று அவர் நினைத்தார். அவர் நான்கு பெரிய நெடுஞ் சாலைகளை அமைத்தார், அவற்றில் மிகப்பெரியது டாக்காவிற்கு அருகிலுள்ள சோனார்காவில் இருந்து சிந்து நதி வரையிலான 1500 கிமீ நீள சாலை. அது இன்று ஜிடி சாலை என்று அழைக்கப்படுகிறது.

இது தவிர, ஆக்ராவிலிருந்து புர்ஹான்பூர், ஆக்ராவிலிருந்து ஜோத்பூர் மற்றும் லாகூரிலிருந்து முல்தான் வரையிலும் சாலைகளை அமைத்தார். இதுமட்டுமின்றி, சில மைல் இடைவெளியில், மக்கள் தங்குவதற்கு விடுதிகளை கட்டினார். ஒவ்வொரு விடுதியிலும் இரண்டு குதிரைகள் வைக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டார். செய்திகளை கொண்டு செல்பவர்கள் இவற்றைப் பயன்படுத்தலாம். இந்த சாலைகளும் விடுதிகளும் ஷேர்ஷா நிர்வாகத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தன.

அவரது ஆட்சியின் கீழ் அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டனர். கூடவே அவரது வீரர்களும் அடிக்கடி நகர்ந்து கொண்டிருந்தனர். இந்த தங்கும் விடுதிகள் அதிகாரிகள் மற்றும் பேரரசரின் ஓய்வு இல்லமாக செயல்பட்டன. ஒவ்வொரு விடுதியிலும் மன்னருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

ஷேர்ஷா குறுகிய காலமே ஆட்சி செய்தாலும்கூட கட்டடக் கலையில் அவரது பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. டெல்லியில் பழைய கோட்டையை அவர் கட்டினார். டெல்லியின் ஆறாவது நகரமாக அதை உருவாக்குவது அவரது எண்ணமாக இருந்தது. 1542 ஆம் ஆண்டில், அவர் பழைய கோட்டைக்குள் கிலா-இ-குஹ்னா மசூதியைக் கட்டினார். ஆனால் சாசாராமில் கட்டப்பட்ட அவரது கல்லறை, சிறந்த கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது.

"ஷேர்ஷா தனது மக்களுக்கு ஒரு தந்தை போன்றவர். அவர் சமூக விரோதிகளிடம் மிகவும் கண்டிப்பானவர். ஆனால் அவரது இதயம் தாழ்த்தப்பட்ட மற்றும் உடல் ஊனமுற்ற மக்களுக்காக துடித்தது. மிகுந்த இரக்கமும் அன்பும் கொண்டவர் அவர். ஒவ்வொரு நாளும் 500 தோலா தங்கத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை அவர் பசித்தவர்களுக்கு உணவளிக்க ஒதுக்கினார்.

அவர் எங்கு தங்கினாலும் அங்குள்ள ஒவ்வொருவருக்கும் உணவு வழங்கப்படும் என்று விதி வகுத்திருந்தார். அரண்மனைக்கு வரும் ஒவ்வொருவருக்கும் உணவளிக்குமாறு அனைவருக்கும் உத்தரவிடப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கப்பட்டது," என்று ஷேக் ரிசூல்லா முஷ்தகி தனது 'வகியத்-இ-முஷ்தகி' புத்தகத்தில் எழுதியுள்ளார்.

"தனது நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் கூட ஷேர்ஷா அடக்குமுறையாளர்களை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இரவில் மூன்றில் இரண்டு பங்கு கழிந்த பிறகு, அவரது வேலைக்காரர்கள் அவரை எழுப்புவார்கள். அதன் பிறகு அவர் ஃபஜ்ர் தொழுகை வரை நான்கு மணி நேரம் நாட்டின் நிலை பற்றிய அறிக்கைகளை கேட்பதில் செலவிட்டார்..எந்தவொரு காரணமும் இல்லாமல் ரத்தம் சிந்துவதை அவர் கடுமையாக எதிர்த்தார்."

ஷேர்ஷாவின் நிர்வாகம் மிகவும் சிறப்பாக இருந்தது. எந்தப்பகுதியில் குற்றங்கள் நடந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

"கிராமத்தின் கணக்குகளை கவனிப்பதை விட கிராமத் தலைவருக்கு மேலும் பல பொறுப்புகள் இருந்தன. கிராமத்தில் ஏதேனும் குற்றம் நடந்தால், அதற்கு அவர் பொறுப்பு.. குற்றவாளிகளை பிடிப்பதும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்க நடவடிக்கை எடுப்பதும் அவர் பொறுப்பு," என்று அப்பாஸ் கான் சர்வானி எழுதுகிறார்.

விவசாயிகளின் மீது சிறப்பு கவனம்

ஷேர்ஷாவின் கருணையைப் பற்றி பல பிரபலமான கதைகள் உள்ளன.

"ஷேர்ஷா எப்போதும் இரக்ககுணம் கொண்ட வெற்றியாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஹுமாயூனை வெற்றிகொண்டபிறகு அவர் ஆக்ராவை அடைந்தபோது, பல முகலாய ராணிகளும் பெண்களும் வெளியே வந்து அவர் முன் தலை குனிந்தபோது அவர் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது, "என்று அப்பாஸ் சர்வானி எழுதுகிறார்.

"தனது ராணுவத்தின் கால்கள் பட்டு மக்களின் வயல்கள் வீணாகக்கூடாது என்பதில் அவர் எப்போதும் அக்கறை காட்டினார். ஆனால் ஏதாவது காரணத்தால் தனது படையால் வயல்கள் நாசமானால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதை அவர் உறுதி செய்வார்."

மத நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம்

தனது வீரர்களுடன் அவரது நடத்தை மிகவும் நன்றாக இருந்தது. அவரது வீரர்கள் அவருக்காக எதையும் செய்யத்தயாராக இருந்தனர். புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஹெச்.ஜி.கீன் தனது 'மெமோயர்ஸ் ஆஃப் தி ரேசஸ் ஆஃப் தி நார்த் வெஸ்ட் ஃபிரான்டியர்' என்ற புத்தகத்தில், "அவர் எப்போதும் தனது குடிமக்களுக்கு சிறந்ததையே விரும்பும் முதல் முஸ்லிம் ஆட்சியாளர்" என்று எழுதுகிறார்.

"தனது குறுகிய ஆட்சிக்காலத்தில் அவர் மக்களிடையே மத நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஷேர்ஷாவின் ஆட்சியில் இந்துக்கள் முக்கிய பதவிகளில் இருந்தனர். அவருக்கு பிடித்த தளபதி பிரம்மாதித்ய கவுர் ஆவார். சௌசா மற்றும் பில்கிராம் போர்களுக்குப் பிறகு அவரை ஹுமாயூனை பின்தொடர ஷேர்ஷா அனுப்பினார். அரசு தனது குடிமக்கள் மத்தியில் எப்போதும் பிரபலமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆங்கிலேயர்கள் உட்பட எந்த ஒரு அரசும் இதைப் புரிந்துகொள்ளும் ஞானத்தைக் காட்டவில்லை."

Getty Images புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் எச்.ஜி. கீன் அதிகார மையமாக செயல்பட்ட ஷேர்ஷா

ஷேர்ஷாவின் அரசு, 'ஒரு நபர் அரசாக' இருந்தது. "ஷேர்ஷா நாட்டின் அனைத்து விவகாரங்களையும் குறிப்பாக நிதி விஷயங்களை தானே கவனித்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அவருடைய ஒவ்வொரு அமைச்சரும் தான் செய்த வேலைகள் மற்றும் தான் செய்யப்போகும் வேலைகள் பற்றிய விவரங்களை அவரிடம் கொடுத்தனர். ஷேர்ஷாவின் அமைச்சர்கள். அவருடைய செயலர்கள் போலப் பணியாற்றினர். கொள்கை விஷயங்கள் அனைத்துமே ஷேர்ஷாவின் கைகளிலேயே இருந்தன,"என்று அப்பாஸ் சர்வானி எழுதுகிறார்.

"ஷேர்ஷாவிற்கு ராணுவ விஷயங்களில் முழுக் கட்டுப்பாடு இருந்தது. அவரது படைவீரர்கள் தங்கள் கட்டளை அதிகாரிகளின் உத்தரவுகளை புறந்தள்ளி பேரரசரின் கட்டளைகளைப் பின்பற்றினார்கள். ஒவ்வொரு வீரருக்கும் ஷேர்ஷா சம்பளம் நிர்ணயம் செய்தார். திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் ஒவ்வொரு வீரருக்கும் ஊதியம் வழங்கப்பட்டது."

கலிஞ்சர் கோட்டை முற்றுகையின் போது நெருப்பில் சிக்கிய ஷேர்ஷா

ஷேர்ஷா 1544-ல் கலிஞ்சர் கோட்டையை முற்றுகையிட்டார். ஷேர்ஷா ஆக்ராவுக்குத் திரும்பாமல் கச்வாடாவிலிருந்து நேராக கலிஞ்சருக்குச் சென்றதாக பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். 'சலாட்டின்-இ-ஆப்கானின்' ஆசிரியரான அஹ்மத் யாத்கர் எழுதுகிறார், "ஷேர்ஷா கலிஞ்சருக்கு சென்றதற்கான காரணம் பீர் சிங் புந்தேலா. தனது அரசவைக்கு வருமாறு ஷேர்ஷா அவருக்கு உத்தரவிட்டார். ஆனால் அவர் தப்பி ஓடி கலிஞ்சர் ராஜாவிடம் தஞ்சம் புகுந்தார். அவரை ஷேர்ஷாவிடம் ஒப்படைக்க ராஜா மறுத்தார்."

கலிஞ்சர் கோட்டை கடல் மட்டத்திலிருந்து 1230 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்தது. ஷேர்ஷா கோட்டையைச் சுற்றி வளைத்து, சுரங்கங்கள் மற்றும் உயரமான முற்றுகை கோபுரங்களைக் கட்டத் தொடங்கினார். எல்லா ஏற்பாடுகளும் முடிந்ததும், 1545 , மே 22 ஆம் தேதி கோட்டையை தாக்க முடிவு செய்யப்பட்டது. தாக்குதலில் பங்கு கொள்ள ஷேர்ஷா தாமே முன் வந்தார்.

"தரியா கான் வெடிகுண்டுகளைக் கொண்டு வந்ததும் ஷேர்ஷா அம்பு எய்து கொண்டிருந்த உயரமான மேடையிலிருந்து இறங்கி வந்து குண்டுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நின்றார். குண்டுகளில் நெருப்பை ஏற்றி கோட்டைக்குள் வீசுமாறு கட்டளையிட்டார். வீரர்கள் இந்த குண்டுகளை கோட்டைக்குள் வீசி எறிந்தபோது, குண்டுகளில் ஒன்று கோட்டைச் சுவரில் மோதி மீதம் இருந்த வெடிகுண்டுகள் மற்றும் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் வந்து விழுந்து வெடித்துச் சிதறியது. அங்கு பெரும் வெடிப்பு ஏற்பட்டு சுற்றிலும் தீ பரவியது. கலீல், ஷேக் நிஜாம் மற்றும் அங்கிருந்த மற்ற வீரர்களுக்கு ஓரளவு தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் ஷேர்ஷா கிட்டத்தட்ட பாதியளவு எரிந்துவிட்டார்," என்று அப்துல் காதர் பதாயுனி எழுதுகிறார்.

இறப்பதற்கு முன் கோட்டையை கைப்பற்றினார்

பாதி எரிந்த நிலையில் அவர் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடைய அரசவையின் புகழ்பெற்ற அனைவரும் அங்கு இருந்தனர். ஷேர்ஷா தனது தளபதிகளில் ஒருவரான இசா கானை அழைத்து, தான் உயிருடன் இருக்கும்போதே கோட்டையை கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைக் கேட்ட இசா கான் கோட்டையை நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதலை தொடங்கினார்.

"ஷேர்ஷாவின் வீரர்கள் எறும்புகள் மற்றும் வெட்டுக்கிளிகள் போல கோட்டைக்குள் புகுந்தனர். ஷேர்ஷாவுக்கு நினைவு திரும்பும் போதெல்லாம் அவர் குரல் எழுப்பி , கோட்டையைக் கைப்பற்ற தனது வீரர்களை ஊக்குவிப்பார். யாராவது அவரைப் பார்க்க வந்தால், உங்கள் நேரத்தை இங்கு வீணாக்குவதற்கு பதிலாக சண்டையிடச் செல்லுங்கள் என்பார். அது மே மாதம், மிகவும் வெப்பமான காற்று வீசியது."என்று அப்பாஸ் சர்வானி குறிப்பிடுகிறார்.

ஷேர்ஷாவின் வீரர்கள் அவரது உடலில் சந்தனப்பொடி மற்றும் பன்னீரைத் தெளித்தனர், ஆனால் நேரம் செல்லச்செல்ல வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

"பிற்பகல் தொழுகை நேரத்தில் ஷேர்ஷாவின் ராணுவம் கோட்டைக்குள் நுழைந்தது. ராஜா கிரத் சிங் தனது ஆதரவாளர்கள் சிலருடன் ஒரு வீட்டில் தன்னை அடைத்துக்கொண்டார். ஷேர்ஷாவின் வீரர்கள் அந்த வீட்டை நாலாபுறமும் சுற்றி வளைத்தனர்."

"ஷேர்ஷாவிடம் வெற்றிச் செய்தியை சொன்னவுடனே, அந்த வலியிலும் அவரது முகத்தில் மகிழ்ச்சியும், மனநிறைவும் தெரிந்தது. ஆனால் சில நிமிடங்களில் அவர் வாயிலில் இருந்து கடைசி வார்த்தைகள் உதிர்ந்தன. 'யா குதா, உனக்கு நன்றி. என்னுடைய இந்த ஆசையை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள்.' இதைச் சொன்னவுடன் அவர் கண்கள் நிரந்தரமாக மூடின.

ஷேர்ஷாவின் கல்லறை

ஷேர்ஷா இறந்த ஐந்தாவது நாளில், அவரது இரண்டாவது மகன் ஜலால் கான் கலிஞ்சரை அடைந்தார். அங்கு அவர் இந்தியாவின் பேரரசரின் அரியணையில் அமர்த்தப்பட்டார். ஷேர்ஷா கலிஞ்சர் அருகே லால்கர் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவரது உடல் அங்கிருந்து வெளியே எடுக்கப்பட்டு சாசாராமில் உள்ள ஷேர்ஷாவின் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.