மதுக்கடைகளில் மது பிரியர்களிடம் இருந்து ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும் அதற்கு முடிவே கிடைக்காமல் உள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட், இடமாற்றம், கடும் கட்டுப்பாடுகள் என விதித்தாலும் 10 ரூபாய் வசூலிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் டாஸ்மாக் கடைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி மதுபான விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்டவைகளை கண்டறியமுடியும்.
அந்த வகையில் ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. அடுத்ததாக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதிலும் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து எம்.ஆர்.பி விலையிலேயே மது வாங்க டைனமிக் க்யூஆர் கோடுகளை டாஸ்மாக் நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான ஆய்வானது நடைபெற்று வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தும்போது அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே பணம் செலுத்தும் வகையில் டைனமிக் க்யூஆர் கோடு உருவாக்கப்படும்.எனவே பாட்டிலுக்கு கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்க முடியாத நிலை ஏற்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக சென்னை எழும்பூரில் உள்ள 2 கடைகள் உள்பட மாநிலத்தின் 5 மண்டலங்களிலும் உள்ள இரண்டு கடைகளில் பிஓஎஸ் இயந்திரங்களுடன் ஸ்கேனர்களை இணைக்கும் சோதனையானது தற்போது நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சென்னையில் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 70 டாஸ்மாக் கடைகளிலும், அடுத்த ஒரு வாரத்தில் சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் டைனமிக் க்யூஆர் கோடுகளை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மதுபிரியர்களிடம் இருந்து கூடுதலாக பணம் வசூலிப்பது தடுக்கவாய்ப்பு உருவாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.