சீமான் குற்றச்சாட்டுக்கு திமுக அமைச்சர் கோவி. செழியன் மறுப்பு!
Seithipunal Tamil November 14, 2025 07:48 PM

அதிமுக தலைமையிலான கூட்டணி, போலி வாக்காளர்கள் மூலம் தி.மு.க-வின் வெற்றியைத் திருட நினைத்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த குற்றச்சாட்டு:

திருநறையூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பீகார் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால், தோல்வி முகத்தில் இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்) என்ற பெயரில் சதித் திட்டம் தீட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.

"சிறுபான்மை மற்றும் பட்டியல் இன மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால், முதல்வருக்கு உள்ள ஆதரவைத் தடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில், தேர்தல் ஆணையத்தின் துணையோடு பா.ஜ.க. அரசு இந்தச் சதியைச் செய்கிறது."

"அதை அடிமைத்தனமாக அ.தி.மு.க. வரவேற்கிறது. வெளிமாநிலப் போலி வாக்காளர்கள் மூலம் தி.மு.க.வின் வெற்றியைத் திருடி விடலாம் என அ.தி.மு.க. கூட்டணி நினைக்கிறது. 2026 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்."

சீமான் கருத்துக்கு மறுப்பு:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனியார் பல்கலைக்கழகங்களை அரசு ஊக்குவிப்பதாக வெளியிட்ட கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு...

தனியார் பல்கலைக்கழகங்கள் குறித்த சட்ட முன்வடிவை முதல்வர், கல்வியாளர்களுடன் கலந்து பேசிச் சட்டப்பேரவையில் ஏற்கெனவே திரும்பப் பெற்றுவிட்டார்.

சமூக நீதியிலும் உயர்கல்வி மேம்பாட்டிலும் அக்கறை கொண்ட திராவிட மாடல் அரசு, கொள்கையில் எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாது என்றும், திரும்பப் பெற்ற சட்ட முன்வடிவு திரும்பப் பெற்ற நிலையில்தான் தொடரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.