செங்கல்பட்டு அருகே கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டு நண்பனை அடித்தே கொலை செய்த 10 பேர் கொண்ட கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் சண்முக பாண்டியன் (26). இவர் செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். சண்முக பாண்டியனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1-வயதில் கைக்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சண்முகபாண்டியன் தனியார் பைன்ன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தபோது வல்லத்தை சேர்ந்த மதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அப்போது மதியிடம் சண்முகபாண்டியன் வேலை வாங்கி தருவதாக கூறி 30 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. சொன்னபடி வேலை வாங்கி தராமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் தொடர்ந்து சண்முக பாண்டியன் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இன்று சண்முக பாண்டியன் தற்போது என்னிடம் 20 ஆயிரம் தான் உள்ளது. மீதி பணத்தை ஏற்பாடு செய்து தருகிறேன் என மதியிடம் கூறியுள்ளார். அதற்கு மதி வல்லம் பகுதிக்கு பணத்தை உடனடியாக எடுத்து வரும்படி கூறி உள்ளார். சண்முக பாண்டியன் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மதி சொன்ன இடத்திற்கு வந்துள்ளார். அப்போது சண்முக பாண்டியனிடம் 20 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்ட மதி சண்முக பாண்டியன் ஓட்டி வந்த அவரது இருசக்கர வாகனத்தை தனிநபர் ஒருவரிடம் அடமானம் வைத்து 10 ஆயிரம் பெற்று கொண்டுள்ளார்.
மதி மொத்தம் 30ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு நீண்ட நாட்களாக தன்னை ஏமாற்றிய சண்முக பாண்டியனை வல்லம் பகுதியில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து மது போதையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த சண்முக பாண்டியன் மயங்கி கீழே விழுந்துள்ளார். அப்போது 108-ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த 10-பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த சண்முக பாண்டியனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
தொடர்ந்து சண்முக பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் மதி மற்றும் அவரது நண்பர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கொடுத்த பணத்தை திருப்பி தந்த நண்பரை அடித்து கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.