Maithili Thakur: `போஜ்புரி பாடகி to அரசியல்வாதி' - பீகாரின் இளம் MLA; யார் இந்த மைதிலி தாக்கூர்?
Vikatan November 15, 2025 02:48 AM

பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகாரில் 122 தொகுதிகளில் வெற்றிப்பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். ஜே.டி.(யு) தலைமையில் என்.டி.ஏ கூட்டணியும், ஆர்.ஜே.டி தலைமையில் இந்தியா கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டன.

தற்போதுவரை 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், பீகாரின் அலி நகர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றிருக்கிறார்.

மைதிலி தாக்கூர் யார் இந்த மைதில் தாக்கூர்?

நாட்டுப்புறப் பாடகியான மைதிலி தாக்கூர், வடக்கு பீகாரில் உள்ள மதுபனி மாவட்டத்தின் பெனிபட்டியைச் சேர்ந்தவர். ஆரம்பகால பள்ளிப்படிப்புக்குப் பிறகு, அவரது குடும்பம், மைதிலி தாக்கூரின் இசைப் பயிற்சிக்காக டெல்லிக்கு குடிபெயர்ந்தது.

துவாரகாவில் உள்ள பால் பவன் சர்வதேச பள்ளியில் கல்வியைத் தொடர்ந்த மைதில் தாக்கூர், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஆத்ம ராம் சனாதன் தர்ம கல்லூரியில் (ARSD கல்லூரி) இசைப் பயிற்சியை முடித்தார்.

அதைத் தொடர்ந்து தனது சகோதரர்களான ரிஷவ் மற்றும் அயாச்சியுடன் இணைந்து, போஜ்புரி நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பீகாரின் இசை பாரம்பரியத்தைப் பாதுகாப்பவர் என அறியப்படும் மைதிலி தாக்கூர், சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பக்தி இசையில் பயிற்சி பெற்ற பாடகி மைதிலி தாக்கூர், இந்த ஆண்டு ஜூலை 25 அன்று தன் 25 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் (BJP) வேட்பாளராக போட்டியிடுவேன் என அறிவித்தார்.

மைதிலி தாக்கூர்

அதைத் தொடர்ந்து, அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார். அப்போது, ``கட்சி எனக்கு எந்த வேலையை ஒதுக்கினாலும், அதை நான் முழு அர்ப்பணிப்புடன் செய்வேன்" எனக் குறிப்பிட்டார். இதற்கிடையில், இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களிடையே அவருக்கு இருக்கும் நெருக்கம் தேர்தல் உத்வேகமாக மாறும் என்று பா.ஜ.க நம்பியது.

இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதற்கு முன்னர் பேட்டியளித்திருந்த மைதிலி தாக்கூர், ``இந்த வருடம் என் பிறந்தநாளில் கூட, தேர்தலில் போட்டியிடுவது குறித்து எனக்கு எந்த யோசனையும் இல்லை.

ஆகஸ்ட் மாதம், மாநில பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான நித்யானந்த் ராய் ஜியிடமிருந்து பாட்னாவுக்கு வருமாறு எனக்கு அழைப்பு வந்தது. அங்கு நான் கட்சியின் பீகார் பொறுப்பாளர் வினோத் தவ்டே ஜியைச் சந்தித்தேன்.

மீண்டும், நான் டெல்லிக்கு வந்தேன், ஆறு நாட்களுக்குப் பிறகு, பாட்னாவுக்கு வருமாறு எனக்கு மீண்டும் அழைப்பு வந்தது. அப்போதுதான் அலிநகரில் இருந்து தேர்தலில் போட்டியிடச் சொன்னார்கள்...பல பா.ஜ.க தலைவர்கள் கலந்துகொள்ளும் கட்சியின் கலாச்சார நிகழ்வுகளில் நாட்டுப்புற மற்றும் பக்தி பாடல்களைப் பாட அழைத்திருக்கிறார்கள்.

எனவே பல தலைவர்களை எனக்கு முன்பே தெரியும். அவர்கள் எனக்கு தேர்தலில் போட்டியிடக் கேட்டுக்கொணடபோது என்னால் அதை மறுக்க முடியவில்லை.

நான் எம்.எல்.ஏ-வாக ஆனதும் பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் எனக் கருதுகிறேன். நான் எம்.எல்.ஏ.வானவுடன் என்னையும் வேட்பாளராகத் தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பேன்" என்றார்.

BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK | Imperfect Show
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.