இந்திய அணியின் அனுபவமிக்க ஆல்-ரவுண்டரும், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனுமான அக்சர் படேல், தலைமைப் பண்பு குறித்து மிக முக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஒரு கேப்டனாக இருப்பவர், சிறப்பாக ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தை அவர் மறுத்துள்ளார். கேப்டன் என்பவர் பேசுவதை விடவும், அணியின் வீரர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது தான் மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அக்சர் படேல், “இவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது, அதனால் இவர் கேப்டன்ஷிப் பொறுப்புக்குச் சரிப்பட மாட்டார் என்று மக்கள் பேச ஆரம்பிக்கிறார்கள். ஆனால், ஒரு கேப்டனின் பணி வெறும் பேசுவது அல்ல,” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அக்சர் படேல், “ஒரு கேப்டனின் பணி என்னவென்றால், தனது வீரரின் திறமையைத் தெரிந்து கொண்டு, அவரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர்வது தான். அந்த வீரரின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஒரு கேப்டன் அறிந்திருக்க வேண்டும். அவரிடம் இருந்து எப்படி வேலையை வாங்க வேண்டும் என்று கேப்டனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்” என்று அவர் விளக்கம் அளித்தார்.
“ஒரு நல்ல ‘பர்சனாலிட்டி’ இருக்க வேண்டும், சிறப்பாக ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று மக்கள் தங்கள் சொந்தக் கருத்தின் அடிப்படையில் தான் நினைக்கிறார்கள். ஒரு கேப்டன் பொறுப்புக்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது. மக்கள் தங்களுடைய தனிப்பட்ட மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்” என்றும் அக்சர் படேல் உறுதியுடன் தெரிவித்தார்.