சபரிமலை மண்டல பூஜை விழா; நவ.16ல் நடைதிறப்பு! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
Dhinasari Tamil November 15, 2025 03:48 AM

சபரிமலையில் மாபெரும் விழா மண்டல பூஜை நவ 16ல் நடை திறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் வரும் 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நடை திறந்த பின்னர் அடுத்த ஒரு வருடத்திற்கான புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

மறுநாள் நவ17 முதல் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயிலில் புதிய மேல்சாந்திகள் நடை திறந்து பூஜைகளை நடத்துவார்கள். அன்று முதல் நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் தொடங்கும். டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். இந்நிலையில் மண்டல கால தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நவ1முதல் துவங்கி நடந்து வருகிறது.

பக்தர்கள் sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். வண்டிப்பெரியார் சத்திரம், எருமேலி, நிலக்கல், பம்பா ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் செயல்படும். ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி கவுண்டர்கள் மூலம் 20 ஆயிரம் பேருக்கும் முன்பதிவு செய்யலாம்.

பக்தர்கள் மரணமடைந்தால் இன்சூரன்ஸ் தொகை வழங்கும் திட்டத்துக்கு நிதி சேகரிப்பதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து ரூ. 5 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கட்டாயம் அல்ல. இந்த இன்சூரன்ஸ் பலனை அடைவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ஆவணங்கள் தேவைப்படுவதால் பக்தர்கள் முடிந்தவரை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

சபரிமலையில் இந்த ஆண்டு பாதுகாப்பு நடவடிக்கையாக ஏ.ஐ. கேமராக்கள்-டிரோன் மூலம் கண்காணிப்படுகிறது

இதுவரை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் மொத்தம் 21.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
6 கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் அடுத்த 15 நாட்களுக்கான முன்பதிவு முடிவடைந்து விட்டது. 16-ந் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் மொத்தம் 21.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இனி பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டி பெரியார் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள உடனடி கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த நாட்களில் தரிசனம் செய்ய முடியும். சபரிமலைக்கு மண்டல-மகரவிளக்கு யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை சிறப்பாக செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இது குறித்து கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. ரவாடா சந்திரசேகர் கூறுகையில், நிலக்கல், பம்பா மற்றும் சன்னிதானம் ஆகிய 3 முக்கிய மண்டலங்களிலும் 6 கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

கூட்ட நடமாட்டம் மற்றும் போக்குவரத்தை கண்காணிக்க டிரோன் கண்காணிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்து, மொபைல் பிரிவுகள் பயன்படுத்தப்படும். முக்கிய இடங்களில் கமாண்டோ படையினர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். திருட்டுகளை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் சிறப்பு திருட்டு எதிர்ப்பு படை மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் இயக்கப்படும் சி.சி.டி.வி. கேமராக்கள் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

சபரிமலை மண்டல பூஜை விழா; நவ.16ல் நடைதிறப்பு! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.