திருவண்ணாமலை தீபத் திருவிழா நடத்தப்படுவதற்கு புராணங்களில் பல கதைகள் சொல்லப்படுகின்றன. புராண கதைகளின் படி, சிவபெருமான் ஜோதி வடிவமாக மகாவிஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கு காட்சி அளித்த திருநாள் திருக்கார்த்திகை தீபத் திருநாளாகும். அதே போல் அடி முடி காண முடியாத அண்ணாமலையாராக லிங்கோத்பவ மூர்த்தியாக சிவ பெருமான் வெளிப்பட்டதும் இதே நாளில் தான் என சொல்லப்படுகிறது. சிவ பெருமானை எப்போதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தவம் செய்து, கிரிவலம் வந்த பார்வதி தேவிக்கு, சிவ பெருமான் கிரிவலப் பாதையில் எட்டு இடங்களில், ஜோதி வடிவம் உள்ளிட்ட எட்டு விதமான ரூபங்களில் திருக்காட்சி அளித்ததும், தனது உடலில் சரிபாதியை அம்பிகைக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்ததும் திருக்கார்த்திகை தீபத் திருநாளில் தான் என சொல்லப்படுகிறது.
பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட கார்த்திகை தீபத் திருநாள் இந்த ஆண்டு டிசம்பர் 03ம் தேதி புதன்கிழமை வருகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 நவம்பர் 24ம் தேதி துவங்கி, டிசம்பர் 03ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழா குறித்த அட்டவணை விபரங்களை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 : நவம்பர் 24 திங்கள் - கொடியேற்றம் (காலை 6 முதல் 07.15 வரை)
திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று கோவிலுக்குள் சென்று மகா தீபத்தை தரிசிக்கவும், மலை மீது சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும். காலையில் ஏற்றப்படும் பரணி தீபத்தையும், மாலையில் மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்தையும் தரிசிப்பதற்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அறிவிப்புக்கள் விரைவில் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. அதே போல் மகாதீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்துபவர்களும் ஆன்லைன் வழியாக காணிக்கை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.