பீகாரில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆளும் தேஜ.,கூட்டணி 203 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் மகா கட்பந்தன் கூட்டணி, 33 தொகுதிகளில் வென்றுள்ளது.
தேர்தல் ஆணைய தளத்தின் அறிவிப்பின் படி,
பீகார் தேர்தல் முடிவுகள்…
பாஜக., – 89
ஐஜத., – 85
லோக் ஜன சக்தி – 19
ரா.ஜ.த., – 25
இ. காங்கிரஸ் – 6
ஏஐஎம்ஐஎம் – 5
ஹிந்துஸ்டானி அவாமி மோர்ச்சா – 5
ராஷ்டிரீய லோக் மோர்ச்சா – 4
சிபிஐ எம் எல் – 2
ஐஐபி – 1
சிபிஎம் – 1
பிஎஸ்பி – 1
பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை பாஜ, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், பீகார் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டுள்ளார். மாலை பாஜக., அலுவலகத்துக்கு வந்து, தொண்டர்கள் மத்தியில் பேசினார். கையில் வைத்திருந்த அங்க வஸ்திர துண்டை மேலே சுழற்றி தொண்டர்களை உத்ஸாகப்படுத்தினார். பின்னர் பீகார் வெற்றி குறித்து அவர் குறிப்பிட்டபோது,
பிரதமர் மோடி பாராட்டும் மகிழ்ச்சியும்!நல்லாட்சி வென்றது. வளர்ச்சி வென்றது. பொதுநல உணர்வு வென்றது. சமூக நீதி வென்றது. 2025 சட்டப்பேரவை தேர்தலில் தேஜகூ.,வுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் வரலாறு காணாத வெற்றியை ஆசிர்வதித்த பீகார் என் குடும்ப உறுப்பினர்களுக்கு மிக்க நன்றி. இந்த அபரிமிதமான வெற்றியானது மக்களுக்கு சேவை செய்யவும் பீகாரில் புதிய தீர்மானத்துடன் பணியாற்றவும் நம்மை வலுப்படுத்தும்.
தேஜகூ., மாநிலம் முழுவதும் முன்னேறிவிட்டது. நமது பாதை சாதனையையும் மாநிலத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் நமது பார்வையையும் பார்த்து மக்கள் எங்களுக்கு இந்தப் பெரும் பெரும்பான்மையை அளித்துள்ளனர். இந்த அபார வெற்றிக்கு முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தேஜகூ., குடும்பத்தின் எங்கள் சகாக்கள் சிராக் பாஸ்வான், ஜீதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோரை வாழ்த்துகிறேன்.
அயராது உழைத்த தேஜகூ.,யின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது வளர்ச்சி மாதிரியை முன்வைக்க பொதுமக்கள் மத்தியில் சென்று எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு பொய்களுக்கும் கடுமையாக பதிலடி கொடுத்தார்கள். நான் அவர்களை முழுமையாக மனதார பாராட்டுகிறேன்!
இனி வரும் காலங்களில் பீகாரின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, மாநில கலாச்சாரத்தின் புதிய அடையாளத்தைத் தர கடுமையாக உழைப்போம். இங்குள்ள இளைஞர் சக்தியும் பெண் சக்தியும் இணைந்த வளமான வாழ்க்கைக்கு, அபரிமிதமான வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வோம். – என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி!
நன்றி தெரிவித்த நிதிஷ்குமார்இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ்குமார், அரசு மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கும், பிரதமர் மோடியின் ஆதரவுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார், மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
2025ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் எங்கள் அரசின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையை வைத்து அதை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும், தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடியிடம் இருந்து கிடைத்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறேன். நமது முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தியதின் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி மிக பெரும் பெரும்பான்மையை பெற்றிருக்கிறது.
மகத்தான இந்த வெற்றிக்கு, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களான சிராக் பாஸ்வான், ஜிதன்ராம் மஞ்ஜி, உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுடன் பீஹார் மேலும் முன்னேறும். நாட்டின் வளர்ந்த மாநிலங்களில் பீஹாரும் விரைவில் இடம்பெறும் – என்று நிதிஷ்குமார் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் வெற்றி; உற்சாகத்தில் பாஜக.,! தொண்டர்கள் கொண்டாட்டம்! News First Appeared in Dhinasari Tamil