டெல்லி கார் குண்டுவெடிப்பு: அதி தொழிநுட்பத்தில் 'டார்க் வெப்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ள பயங்கரவாதிகள்: 02 ஆண்டாக தீட்டப்பட்ட சதியா..?
Seithipunal Tamil November 16, 2025 07:48 AM

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் வளர்ந்து வரும் புதிய பரிணாமம் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதாவது, மருத்துவர்கள் போன்ற உயர் கல்வி கற்ற இளைஞர்களைக் கொண்ட இந்த பயங்கரவாதக் குழுவினர், தங்களது சதித் திட்டங்களை அரங்கேற்ற அதிநவீன தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளதாக தெரியவவந்துள்ளது. குறிப்பாக, ‘சிக்னல், செஷன், த்ரீமா’ போன்ற குறியீடு செய்யப்பட்ட ரகசிய செய்தி பரிமாற்ற செயலிகள் மூலம் தங்களுக்குள் தகவல்களைப் இவர்கள் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

அதாவது, புலனாய்வு அமைப்புகளால் தங்களது உரையாடல்களை எளிதில் கண்காணிக்க முடியாத நிலையை அவர்கள் உருவாக்கியுள்ளனர். சுமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீட்டப்பட்ட இந்த சதித்திட்டத்தில், இணையதளம் மூலமாகவே மூளைச்சலவை செய்வது, பல நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடுவது, நிதிப் பரிமாற்றம் செய்வது என அனைத்தையும் செய்து வந்துள்ளனர்.

அத்துடன், சட்டவிரோத ரகசிய இணையதளமான டார்க் வெப் பயன்படுத்தி, 'ஒயிட் காலர் ஜிஹாத்' தொடர்பான பயங்கரவாத சிந்தனைகளைப் பரப்பியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் குழுவினர், தடயங்கள் அதிகம் சிக்காத வகையில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.

அதிர்ச்சி தர கூடிய ஒட்டு விடயமாக, சுமார் 3,000 கிலோ வெடிமருந்துப் பொருட்களைக் கொண்டு, சாதாரண கைக்கடிகார பேட்டரி மற்றும் சர்க்யூட் மூலம் வெடிக்கும் அதிநவீன குண்டுகளை இவர்கள் தயாரித்துள்ளனர். மேலும், உளவுத் துறை பாணியிலான மின்னஞ்சல்கள் மற்றும் ரகசிய சர்வர்களைப் பயன்படுத்தி, தங்களது டிஜிட்டல் செயல்பாடுகளை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி மிகுந்த பாதுகாப்புடன் சதித்திட்டங்களை தீட்டி இயங்கியுள்ளனர்.

அத்துடன், இந்த டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் மூலம் சமூகத்தில் இயல்பாக வாழும் இதுபோன்ற படித்த பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

எனவே, ரகசிய செயலிகளைக் கண்காணிக்கும் மென்பொருட்களை மேம்படுத்துதல், மாநில மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பொதுமக்களும் விழிப்புடன் இருத்தல், மற்றும் துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சர்வதேச புலனாய்வு ஒத்துழைப்பை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமே இதுபோன்ற டிஜிட்டல் பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.