டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் வேலை பார்த்த அல் பலாஹ் பல்கலைகழகம் மீது மோசடி வழக்கு..!
Seithipunal Tamil November 16, 2025 07:48 AM

கடந்த 10-ஆம் தேதி டில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியாகியுள்ளதோடு, 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாட்டை உலுக்கியுள்ள இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக அறியப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் காரை இயக்கி வெடிக்கச்செய்தது உமர் நபி என தெரியவந்தது. அத்துடன், இந்த குண்டுவெடிப்பில் பெண் டாக்டரான ஷாயின் சையத் மற்றும் மேலும் இரண்டு டாக்டர்களுக்கும் தொடர்பு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நான்கு பேரும், டில்லி அருகே பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியவர்கள். இதனால் குறித்த பல்கலைகழகம் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகள் மட்டுமின்றி, அமலாக்கத்துறையினர், டில்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.

அதிலும் குறிப்பாக, அல் பலாஹ் மருத்துவமனைக்கு கிடைக்கும் நிதி மற்றும் அதன் வரவு, செலவு குறித்து விரிவான விசாரணை க்கு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், தொடர் விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

அதேபோல, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் பெற்றதாக அல் பலாஹ் பல்கலை சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், இதற்கு என்ஏஏசி மறுப்பு தெரிவித்திருந்தது. இதனால், குறித்த பல்கலை போலியான தகவலை குறிப்பிட்டிருந்ததும் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அல் பலாஹ் பல்கலை மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார், இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ஏமாற்றுதல் மற்றும் முறைகேடு ஆகிய இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்ததுடன், பல்கலைக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், பல்கலை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி நோட்டீஸ் அளித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.