லட்சத்தீவு அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தெற்கு அந்தமான் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், வரும் 22-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், நாளை (நவ.21) முதல் 24-ஆம் தேதி வரை தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், வரும் 24-ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.