'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு; அச்சத்தில் ஆடிய நிதி நிறுவனங்கள்; என்னதான் பிரச்னை?
Vikatan December 07, 2025 09:48 AM

உலகெங்கும் இருக்கும் பல மில்லியன் நிறுவனங்களின் இணையதளங்கள் பாதுகாப்பாகவும், வேகமாகவும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முன்னணி கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கான 'Cloudflare'-ன் சேவையில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை அடிக்கடி துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் திடீர் துண்டிப்பால் நொடிக்கு பல கோடிகளை ஈட்டிக் கொண்டிருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் 12 நிமிடங்கள் வரை முடங்கிப் போய் இருந்துள்ளது. இந்த 12 நிமிட தற்காலிக முடக்கமெல்லாம் பெரிய விஷயமா என்று தோன்றலாம்.

ஆனால், நொடிக்கு பில்லியன்களில் பணப்புழக்கம் நடந்து வரும் பங்குச் சந்தை நிறுவனங்களான 'Zerodha, Angel One, Groww', செய்தி நிறுவனங்கள், ஷாப்பிங் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகள் சில நிமிடங்கள் நின்றுபோனது பெரும் பதற்றத்தையும், சைபர் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த திடீர் இணையதள துண்டிப்புக்குக் காரணம் இணையதள தகவல்களைத் திருடும் சைபர் அட்டாக்காக இருக்குமோ அல்லது மொத்தமாக இணையதளத்தை முடக்கும் ஏதேனும் வைரஸ் அட்டாக்காக இருக்குமோ என கொஞ்ச நேரத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் பதறிபோய் இருந்தனர்.

இந்தியா, அமெரிக்கா, லண்டன் என பல்வேறு நாடுகளிலும் இந்த பதற்றம் வந்துபோயிருக்கிறது. பலரும் பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தபோது இப்படி நடந்துவிட்டதாகவும், ஆன்லைன் ஆர்டர், டிஜிட்டல் செய்தி இணையதள துண்டிப்பு உள்ளிட்ட சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

 Cloudflare நிறுவனம் விளக்கம்

இந்நிலையில் "இது சைபர் அட்டாக் இல்லை, தொழில்நுட்பக் கோளாறுதான். இணையதள சர்வர்களில் ஏற்பட்ட அதிக இயக்கத்தால் ஏற்பட்ட பிரச்னையாக இருக்கலாம். இதைச் சரிசெய்யும் பராமரிப்புப் பணியால் இப்போது அனைத்தையும் ரீ செட் செய்ததால் இப்படி சில நிமிடங்கள் சேவை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது. நீங்கள் சந்தித்த இந்த இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.

இன்னும் சிறிது நேரத்தில் இதற்கான சரியான தொழில்நுட்பக் காரணங்கள் கண்டறியப்பட்டு இப்பிரச்னை முழுமையாகச் சரிசெய்யப்படும்" என்று கூறியிருக்கிறது 'Cloudflare' நிறுவனம்.

இது முதல் முறை அல்ல இது போல் கடந்த நவம்பர் மாதத்திலும் நடந்திருக்கிறது. குறிப்பாக நவம்பர் 18ஆம் தேதி இதேபோல் சேவை துண்டிப்பு ஏற்பட்டது. அதனால், பல முன்னணி நிதி நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகப் புகார் குவிந்தன.

Cloudflare என்னதான் பிரச்னை?

என்னதான் பிரச்னை?


கடந்த மாதம் நவம்பர் 18ஆம் தேதி இதேபோல் 'Cloudflare'-ல் சேவை துண்டிப்பு நடந்தது. அதற்குக் காரணம் சைபர் அட்டாக் அல்லது ஹேக்கர்களோ, வெளி ஆட்களோ காரணம் இல்லை. 'Cloudflare' நிறுவனமே காரணம்.

இதைத் தெரிந்துகொள்ள 'Cloudflare' எனும் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும்.

இணையதளத்திற்கும் - பயன்பாட்டாளருக்கும் இடையே தகவல்களைப் பாதுகாப்பாகவும், வேகமாகவும் கடத்துவது தான் இந்த கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கின் வேலை. தகவல்களைப் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் சரியான நபரிடம் கொண்டு சேர்ப்பதே இதன் வேலை.

நேரடியாக இணையதளங்களின் சர்வரை, பயனர் அணுகினால் அது பாதுகாப்பு பிரச்னைகளை ஏற்படுத்தும், வேகமாக உலகெங்கும் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும், அதிகமானோர் பயன்படுத்துவதும் சிரமம்.

அதனால்தான் இந்த கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் இணையதளத்தில் இருந்து தகவல்களைப் பல்வேறு சர்வர்கள் மூலம் பயனர்களுக்கு அனுப்புகிறது. இணையதளங்களை எந்தவொரு சைபர் அட்டாக்கும் நேரடியாகத் தாக்குவதைத் தடுக்கும் வேலையைச் செய்கிறது.

உதாரணமாக: ரகசியமான தகவல்களை பாதுகாப்பாக வேறு ஊரில் இருக்கும் ஒருவருக்குச் சொல்ல வேண்டும் என்றால் நம்பிக்கைக்குரிய ஆளிடம் சொல்லி அனுப்புவோம். அந்த நம்பிக்கைக்குரிய ஆள் தான் இந்த 'Cloudflare' எனும் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் என்று புரிந்துகொள்ளலாம்.

இந்த Cloudflare-ன் முதல் வேலை இணையதளத்தைப் பயன்படுத்துவது மனிதர்களா அல்லது பாட்களா என்று கண்டறிவது தான். பாட்கள் என்று கண்டறிந்தால் அது நல்ல பாட்களா அல்லது பாதுகாப்பை அச்சுறுத்தும் பாட்களா என்று வகைப்படுத்தி கெட்ட பாட்களுக்குத் தகவல்களை அணுகும் அனுமதியை மறுக்க வேண்டும்.

நல்ல பாட்கள் பயனர்களின் இணையதளப் பயன்பாட்டிற்குத் தகவல்களைக் கூடுதலாகச் சேகரித்துக் கொடுக்கும். கெட்ட பாட்கள் மூலம் ஹேக்கர்கள், சைபர் அட்டாக், வைரஸ் அட்டாக் நடக்கும். தேவையில்லாமல் நாம் தொடும் பாதுகாப்பற்ற தகவல்கள், பணம் பறிக்கும் லிங்குகள் எல்லாம் கெட்ட சர்வர்களா எடுத்துக் கொள்ளப்படும்.

இதைக் கண்டறியும் Cloudflare-ன் அமைப்பு தான் 'clickhouse database'. இதில் புதிய புதிய பாட்கள், பாதுகாப்பு தொடர்பான அப்டேட்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

இந்த அமைப்பில் தான் 'Cloudflare' தவறான அப்டேட் ஒன்றைச் செய்திருக்கிறது. அதன் மூலம் தகவல்களைக் கண்டறியும் 'bot management system' அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு Cloudflare-ல் இப்படியான பிரச்னைகள் வந்துகொண்டிருக்கின்றன.

இது போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதுகாப்பு, நிதி இழப்பு உள்ளிட்ட பெரும் பிரச்னைகளை 'Cloudflare' சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சந்திக்க நேரிடும்.

இது போன்ற பிரச்னைகள் இனி நடக்காமல் சரிசெய்யவில்லை என்றால் 'Cloudflare' சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் வேறு கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் நிறுவனங்களின் சேவைக்கு மாற நேரிட்டு 'Cloudflare' வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.