கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடம், தங்க நகைகளின் பேரில் வட்டியில்லா கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி 100 சவரன் நகைகளை மோசடி செய்த 46 வயதான அகல்யா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தன்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் பேராசிரியை எனக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அரசு அதிகாரிகள் கையெழுத்திட்ட போலிப் பத்திரங்களையும் காட்டி, சுய உதவி குழு உறுப்பினர்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளார். இந்தப் பெண்ணின் மோசடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கிராம மக்களிடம் பெற்ற நகைகளை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப் போவதாகத் தெரிவித்த அகல்யா, அதன் பிறகு தலைமறைவாகிவிட்டார்.இதனால் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அகல்யாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலியான அதிகாரம் மற்றும் ஆவணங்களைக் காட்டி 100 சவரன் நகைகளை ஏமாற்றிய இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.