கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை மேல் வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலின் மகள் கவுரி (17), சேலம் ஆத்தூர் பகுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பி.காம் முதல் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை காரணமாக சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கவுரியின் கைவிரலில் இருந்த தங்க மோதிரம் காணாமல் போனது. இதனால் அதிருப்தி அடைந்த தாய் செல்வி, “மோதிரம் எங்கே?” என்று கேட்டு கண்டித்துவிட்டு, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வெள்ளிமலைக்கு சென்றுவிட்டார்.

தாயின் கண்டிப்பை மனதில் நிறுத்திக்கொள்ள முடியாமல் கவுரி கடும் மனவேதனையில் மூழ்கி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியதாகக் கூறப்படுகிறது.சில நேரத்திற்குப் பிறகு வீட்டுக்கு திரும்பிய செல்வி, மயக்கத்துடன் கிடந்த மகளை பார்த்து பதறியதும், கேள்வி கேட்டபோது விஷம் குடித்துவிட்டதாக கவுரி தெரிவித்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், கவுரியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. நேற்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சம்பவம் குறித்து கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் திட்டிய வருத்தத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி கவுரியின் மரணம், கல்வராயன்மலை பகுதியில் பேரதிர்ச்சியும் கடும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.