கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற டிசம்பர் 19-ஆம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார்.
தி.மு.க. அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, 2025-26ஆம் கல்வியாண்டில் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
இதற்கான கொள்முதல் ஒப்பந்தங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், டிசம்பர் 19 அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கவுள்ளார்.
முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 10 லட்சம் மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் மடிக்கணினிகளை வழங்குவதற்கான காலக்கெடுவை அரசு நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்கல்வி மாணவர்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்துவதையும், நவீன கற்றல் முறைக்கு அவர்களை தயார் செய்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்த திட்டம் விரைந்து செயல்படுத்தப்படுகிறது.
Edited by Mahendran