கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ. பங்களா டிவிஷன் பகுதியில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஜா வலி-ஷாஜிதா பேகம் தம்பதியரின் 5 வயது மகன் சைபுல் ஆலம், சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 7 மணியளவில் தனது அண்ணனுடன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சைபுல் ஆலமை, தேயிலைத் தோட்டத்துக்குள் இருந்து வந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கவ்வி இழுத்து வனப்பகுதிக்குள் சென்றது. இதைக் கண்ட பெண் தொழிலாளி ஒருவர் சத்தம்போட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டனர். மகனை சிறுத்தை கவ்விச் சென்றதைக் கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், போலீசார் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் வனப்பகுதியில் உள்ள மதுரைவீரன் கோவில் பின்புறம், சிறுவன் சைபுல் ஆலம் கழுத்தில் சிறுத்தை கடித்த காயங்களுடன் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தான். உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வால்பாறை பகுதியில் ஏற்கனவே பச்சைமலை, நடுமலை, ஊசிமலை எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தை தாக்கிச் சிறுவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், இதுபோன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.