உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாகத் தந்தை ஒருவரே தனது இரண்டு குழந்தைகளின் உயிரையும் பறித்து, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முபாரக்பூர்–குர்த் கிராமத்தைச் சேர்ந்த பாபுராம் (28) என்பவருக்கு, தீபன்ஷு (5) என்ற மகனும், ஹர்ஷிகா (3) என்ற மகளும் இருந்தனர். கடந்த சில நாட்களாக பாபுராமுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப மோதல்கள் தீவிரமடைந்து வந்ததாக தகவல்.

அதில் ஒருதரப்பட்ட கலகமே நேற்று மீண்டும் வெடித்தது.கோபமும் மனஉளைச்சலும் கலந்த நிலையில், பாபுராம் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கே, குழந்தைகள் இருவருக்கும் விஷ கலந்த திரவத்தை கொடுத்து கொடூரமாக உயிரிழக்கச் செய்ததோடு, பின்னர் தானும் அதே விஷத்தை அருந்தியுள்ளார்.இந்த தகவல் தெரிந்தவுடன் கிராம மக்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று மூவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், மருத்துவர்கள் பரிசோதித்தபோது மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.பாபுராம் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. குழந்தைகளின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இரு குழந்தைகளின் கோர மரணம் கிராமம் முழுவதும் மிகுந்த சோகத்தையும் மனநொந்தத்தையும் உருவாக்கியுள்ளது.